HT Temple Special: ஆன்மபலம் தரும் ஒற்றைக் கல்லினால் ஆன ஆஞ்சநேயர்!
Jul 07, 2023, 01:34 PM IST
Namakkal Anjaneyar Temple: 18 அடி உயரமுள்ள ஒற்றைக் கல்லினால் ஆன நாமக்கல் ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்ட வெளியில் மழை, வெயில் பட அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
நாமக்கல்லில் உள்ள உலகப்புகழ்பெற்ற அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இவர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
சமீபத்திய புகைப்படம்
18 அடி உயரமுள்ள ஒற்றைக் கல்லினால் ஆன இங்குள்ள ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்ட வெளியில் மழை, வெயில் பட அமைந்துள்ளார். ராமாயண காலத்தில், சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துவந்தார் ஆஞ்சநேயர். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்துவந்தார். அந்த நேரத்தில் சூரியன் உதயமான படியால், வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சந்தியாவந்தனத்தை முடித்தார்.
மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயன்றார். முடியவில்லை. 'ராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல்' என்றொரு வானொலி கேட்க ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார். இராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் இங்கே வருகிறார். அவர் விட்டு போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள்பாலிக்கிறார்.
பல்லவர் காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டது. மலையின் கிழக்கே அரங்கநாதன் கோயில் உள்ளது. இங்கு 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடகன் மீது படுத்தவாறு திருவரங்கன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
நாமகிரி அம்மனுக்கு பத்து நாட்கள் தசரா திருவிழா கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத ஹஸ்த நட்சத்திரத்தில் நரசிம்மர், ரங்கநாதர், அனுமன் ஆகியோருக்குத் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெறும். இவ்விழா 15 நாட்களுக்கு நடைபெறுகின்றது. மார்கழி மாதம் அமாவாசை தினத்தன்று அனைத்து பக்தர்களாலும் அனுமன் ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்