Kalameghaperumal Temple: நண்பனாய் துணை நிற்கும் பெருமாள்!
Dec 20, 2022, 04:20 PM IST
நண்பனாக எப்போதும் நம் துணை வரும் திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.
நண்பனாக எப்போதும் நம் துணை வரும் தோழனாக பிரார்த்தனைகளுக்கு செவி சாய்த்து நிறைவேற்றுபவராக பெருமாள் அருளும் தலம் ஒன்று மதுரை அருகே உள்ளது. அதுதான் திருமோகூர் திருத்தலம். மதுரை மற்றும் மேலூர் செல்லும் சாலையில் உள்ள ஒத்தக்கடை என்னும் ஊரிலிருந்து திருவாதவூர் செல்லும் வழியில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த திருத்தலம் 108 திவ்ய தேசங்களில் திருமோகூர் 94வது திருத்தலம்.
சமீபத்திய புகைப்படம்
நம்மாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் மங்களா சாசனம் செய்து தலம். இங்கு பெருமாள் காளமேக பெருமாளாக அருள் பாலிக்கிறார். காளமேகம் என்றால் கருமையான மழையை தரும் மேகம் என்று பொருள். பக்தர்களின் வேண்டுகோளுக்கு தாமதிக்காமல் அருளை மலை போல் பொழியும் பெருமாள் என்பதால் இவருக்கு அந்த பெயர்.
தெய்வம் என்ற நிலையில் இருந்து நண்பனாய் நம் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து நம்மோடு வழி துணையாய் வரும் பெருமாள் இவர் என்பதால் ஆப்தன் என்ற திருநாமத்தாலே அழைக்கப்படுகிறார். திருமோகூர் தலத்துக்கு வரலாற்று சிறப்புகளும், புராண சிறப்புகளும் ஏராளம் . இங்குதான் பெருமாள் இந்த தலத்தில் தேவர்களுக்கு மட்டுமல்ல துவாபர யுகத்தில் புலஸ்திய முனிவர் தவம் இருந்து வேண்டிக்கொள்ள அவருக்கு கூர்ம அவதாரத்தின் போது தான் எடுத்த மோகினி அவதாரத்தை காட்டியறினாராம் பகவான்.
அதன் காரணமாக இந்த திருமோகூர் என்று பெயர் பெற்றது. ராஜகோபுரம் உயர்ந்த மதில்களும், விசாலமான பிரகாரமும் அழகுற அமைந்திருக்கிறது ஆலயம். இந்த ஆலயத்தை விஸ்வகர்மாவை கட்டியதாக ஐதீகம். கோயிலுக்குள் நுழைந்ததும் வடக்கில் கம்பத்தடி மண்டபம். இதில் ஆலயத் திருப்பணி செய்த மருது சகோதரர்களின் சில ரூபங்கள் காணப்படுகின்றன.
அடுத்தது கருட மண்டபம், சீதா தேவியை அனைத்தபடி காட்சி தரும் ஸ்ரீராமன், ரதி மன்மதன் என்று இந்த மண்டபத்தின் தூண் சிற்பங்கள் எழிலுறத் திகழ்கின்றன. மண்டபத்தில் நடுநாயகமாக கருடாழ்வார் அருட்காட்சி தருகிறார்.
இந்த ரதி மன்மதன் உருவங்களுக்கு திருமணம் ஆகாதவர்கள் மஞ்சள் பூசி வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. அவ்வாறு செய்தால் தங்களின் இளமையும், அழகும் அதிகரித்து விரைவில் திருமண வரம் கைகூட பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
தொடர்ந்து கருவறையில் அழகிய விமானத்திற்கு தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார் ஸ்ரீ காலமேகபெருமாள். மேலிரு கரங்கள் சங்கு, சக்கரம் ஏந்தி இருக்க, கீழ் வழக்கரத்தால் தனது பாதார விந்தத்தை சுட்டிக்காட்டி என்னை சரணடைவோருக்கு நற்கதி அளிப்பேன் என்று பகவான் அருளும் கோலம் அற்புத திருக்கோலம்.
இங்கு மற்றுமொரு சன்னதியில் பெருமாள் பிரார்த்தனை சயன பெருமாளாக அருள் பாலிக்கிறார். தேவர்கள், அசுரர்களால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தினை கூறி முறையிட பாற்கடலுக்கு வந்தனர். ஆனால் ஹரியோ துயிலில் இருந்தார். பார்ப்பதற்கோ உறக்கம் ஆனால் உள்ளூர அனைத்தையும் அறியும் யோக நிலை.
தேவர்கள் அவன் பராக்ரமங்களில் ஒன்றாக இதை அறியவில்லை போலும். பெருமாளும் நித்திரைக்கு பங்கம் விளைவிக்க கூடாது என்று தம் வேண்டுதலை ஸ்ரீதேவி தாயாரிடம் முறையிட்டு சென்றனர். தேவி பெருமாளை எழுப்பவில்லை. காரணம் அவர்களின் ஆத்மனாக செயல்படுபவன் அவன்.
அதனால் கண்களை மூடி தம்முள் இருக்கும் அந்த பரம்பொருளிடம் விண்ணப்பம் செய்தனர். அடுத்த கணம் பெருமாள் தன் திறந்து அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றினார். பக்தர்களின் பிரார்த்தனையை உடனே நிறைவேற்றி தருவதால் இந்த பெருமாளுக்கு பிரார்த்தனை சயன பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.
இங்கு தாயார் சன்னிதியில் விட்டு வெளியே வருவதில்லை. இந்த கோயிலில் பெருமாள் மட்டுமே வீதி உலா காண்கிறார். உற்சவ காலங்களில் ஆண்டாள் நாச்சியார் பெருமாளுடன் உலா வருகிறார். வைகாசி மாத உற்சவத்தில் எட்டாம் திருநாளில் பெருமாள் இங்கு மோகினி அவதாரத்தில் காட்சி கொடுக்கிறார்.
மாசி மகத்தன்று ஒத்தக்கடை நரசிம்மர் ஆலயத்துக்கும், இந்த பெருமாள் எழுந்தருள்வது வழக்கம். இங்கு நடைபெறும் மோட்ச தீப வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள பெருமாளுக்கும் மோட்சம் அருளும் பெருமாள் என்ற பெயர் உண்டு.