Puthan temple: புதன் பகவான் அம்சத்தில் காட்சி தரும் கைலாசநாதர்!
Dec 10, 2022, 06:07 PM IST
ஏழாவது கைலாசமான தென்திருப்பேரையில் காட்சிதரும் கைலாசநாதர் கோயில் குறித்து இங்கே காண்போம்.
புதன் பகவான் அம்சத்தில் தாமிரபரணி கரையில் ஏழாவது கைலாசமான தென்திருப்பேறையில் கைலாசநாதர் வீற்றிருக்கிறார். இந்த கோயிலில் கைலாசநாதர் என்ற நாமத்தில் இறைவனும் அழகி பொன்னம்மை என்கிற நாமத்தில் அம்பாளும் அருள்பாலிக்கின்றனர்.
சமீபத்திய புகைப்படம்
இந்த கோயிலில் புதன் அம்சத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி மிதுனம் கன்னி ராசிக்காரர்கள் உகந்த ஸ்தலமாகும். தலத்தில் வழிபட்டால் சீர்காழி அருகே உள்ள திருவங்காடு கோயில் உள்ள சிவபெருமானை வணங்கி வழிப சமமாகும்.
108 வைணவ தேசங்களில் சோழநாட்டில் திருச்சிக்கு அருகில் திருப்பேரை என்ற தலம் ஒன்று உள்ளதால், இந்த தலத்தை தென்திருப்பேரை என்று அழைத்தனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கலெக்டராக இருந்த கேப்டன் துரை என்பவர் தாகம் தீர இளநீர் கேட்க அந்த தோப்பில் உள்ள இளநீர் அனைத்தும் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதால் தர மறுத்துள்ளார் விவசாயி.
இந்த இளநீரில் என்ன கொம்பா இருக்கு என்று கலெக்டர் கோபமாக கேட்க, கலெக்டருக்கு பயந்து போன விவசாயியோ மரத்திலிருந்து இளநீரை பறித்து போட மூன்று கொம்புகளுடன் இளநீர் வந்து கலெக்டர் முன்பு விழுந்ததாம். அதை கண்டு தன் தவறை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டதாக தல வரலாறு கூறுகின்றது.
அம்பாளின் சன்னதிக்கு எதிரே அந்த மூன்று கொம்பு முளைத்த தேங்காய் தற்போதும் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த கோயிலுக்கு செல்ல நாம் தெற்கு வாசல் வழியாக நுழைய வேண்டும். சுவாமிக்கும், அம்பாளுக்கும் தனித்தனி கருவறையில் விமானங்களும் உள்ளது.
முதலில் வருவது அம்மன் சன்னதி தான் கருவறைக்கு முன்பு நான்கு தூண்களுடன் அர்த்த மண்டபம் உள்ளது. வடபுறத்தில் பள்ளியறை. முன்னாள் உள்ள பந்தல் மண்டபத்தில் கற்சுவரில் விநாயகர் வீற்றிருக்கின்றார். அடுத்து உள்ளே சென்றால் சுவாமி சன்னதி உள்ளது. முன்னால் இரு துவார பாலகர்கள் உள்ளனர்.
கைலாசநாதர் புதன் அம்சமாய் காட்சி தருகிறார். கருவறையில் கைலாசநாதர் சிறிய லிங்க வடிவில் தாமரை மலரில் காட்சியளிக்கிறார். உள்ளே நந்தி பீடம் இல்லாமல் தரையில் உள்ளது. சுவாமி சன்னதி திருச்சுற்று வழியாக சென்றால் தெற்கில் தட்சிணாமூர்த்தியும், தென்மேற்கில் விநாயகரும், வடமேற்கில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடனும் காட்சி தருகின்றனர்.
இங்குள்ள முருகனும் மயிலும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது தெற்கு பகுதியில் சூர தேவர், சனிபகவான், பைரவர் நவகிரகங்களும், தனித்தனி சன்னதியும் அமைந்துள்ளது. கோயிலில் உள்ள கல்வெட்டுகள் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டுகள் என்று கூறப்படுகிறது.
இந்த கோயிலில் உள்ள பைரவருக்கு ஆறு கைகள் உள்ளது மிகவும் சிறப்பானதாகும். இவர் வேத அம்சமாக கருதப்படுவதால் நாய் வாகனமின்றி காட்சி தருகிறார். தொழில் விருத்திக்காக அஷ்டமி பூஜை பக்தர்களால் செய்யப்படுகின்றது. இந்த கோயிலில் சென்று பூஜை நடத்துவதால் செல்வத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்குவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.