Tharamangalam Kailasanathar: கலை பொக்கிஷமான கைலாசநாதர் கோயில்!
Dec 31, 2022, 11:56 AM IST
மூன்று தலை, மூன்று கால்களுடன் ஜீரகரேஸ்வர சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில், சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்த தாரகவனம். திருமால் தாரை வார்த்து கொடுத்த மங்கள நிகழ்ச்சி நடந்ததால் தரைமங்கலம் என்று அழைக்கப்பட்டது. அது காலப்போக்கில் தாரமங்கலம் என மாறியது.
சமீபத்திய புகைப்படம்
அரிய கலை பொக்கிஷமான கைலாசநாதர் கோயில் மேற்கு திசை நோக்கி உள்ளது. ஐந்து நிலை கொண்ட 150 அடி உயர ராஜகோபுரம் உச்சியில் ஏழு கலசங்களுடன் உள்ளது. கோபுரத்தின் மேல் தளத்தில் கீழே தெரியும் வண்ணம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் சின்னங்களுடன் இந்த பகுதியை ஆண்ட கட்டி முதலியின் சின்னமும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த கோபுரமே ஒரு தேராகவும், அந்த தேரை யானைகள் குதிரைகள் கட்டி இழுப்பது போலவும் கற் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் உள்ளே கலை நுட்பத்துடன் கூடிய 20 பிரம்மாண்ட தூண்களுடன் மகா மண்டபமும் உள்ளது.
இந்த மகா மண்டபத்திற்கு எதிரே கருவறையில் மூலவரான கைலாசநாதர் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். மூலஸ்தானத்தின் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கு நோக்கியபடி சிவகாமசுந்தரி அம்மன், முருக பெருமான் சன்னதிகள் உள்ளன.
பெண்ணுக்கு பெரிது மானமா, தர்மமா என்பதை விளக்கும் வகையில் இரண்டு சிலைகள் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில் இருக்கும் ஒவ்வொரு தூளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு மொத்தம் 23 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் எண்ணிலடங்கா சிற்ப வேலைபாடுகளையும் காணமுடிகிறது.
சிவனின் பல தோற்றங்களும், பிரம்மாவின் அவதாரங்களும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன, ரதி, மன்மதன் சிலையும் ராமர் அம்புவிடும் காட்சியும் மிக நுணுக்கமாக அமைத்துள்ளன. மண்டபத்தின் பின்பக்கம் உள்ள தூண்களில் யாளி மற்றும் குதிரைகளில் பயணம் செய்யும் வீரர்களின் காட்சிகள் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன.
மூன்று தலை மூன்று கால்களுடன் ஜீரகரேஸ்வர சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. புராதன முக்கியத்துவம் வாய்ந்த பல வரலாற்று தகவல்கள் இந்த கோயிலில் கல்வெட்டு பதிவுகளாக உள்ளன. ஆண்டுதோறும் உத்திராயின, தட்சராயின புண்ணிய காலமான மாசி மாதத்தில் மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளி கதிர்களால் கைலாசநாதரை வழிபடும் காட்சி தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலில் மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம் என்பது பக்தர்களின் கருத்து.
இந்த காலத்தில் கைலாசநாதர் சிலை மீது சூரிய கதிர் பட்டு ஒளி வீசுவதைக் காண பக்தர்கள் பலரும் குவிக்கிறார்கள். அந்தி சாயும் நேரத்தில் சூரியனின் கதிர்களும், சந்திரனின் ஒளியும் சிவலிங்கம் மீது படுகிறது. மாசி 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதிக்கு உட்பட்ட 3 நாட்களில் இந்த அதிசயம் நிகழ்கிறது.