தோஷங்களைப் போக்கும் பொங்கு சனிபகவான்!
May 26, 2022, 08:55 PM IST
ஏர் கலப்பையுடன் காட்சி தரும் சனிபகவானை வணங்கினால் தோஷங்கள் நீங்கும்.
சனி கிரகத்தால் வரும் இடர்பாடுகள் நீங்க வேண்டும் என்று விரும்புவோர் அறியவேண்டிய ஒரு ஊர் உள்ளது. அதுதான் திருக்கொள்ளிக்காடு. பொங்கு சனீஸ்வரரைத் தரிசித்து வழிபட்டு நன்மைகளைப் பெறலாம். இந்த திருக்கொள்ளிக் காட்டிலே பஞ்சும், நெருப்பும் பக்கத்தில் இருக்கின்றது.
சமீபத்திய புகைப்படம்
அது எப்படியென்றால் சிவபெருமான் பெயரில் நெருப்பு இருக்கிறது. பார்வதியின் பெயரிலே பஞ்சு இருக்கிறது. நெருப்பு என்றால் அது அக்னி, இங்கிருக்கும் சிவபெருமானின் பெயர் அக்னீஸ்வரர். இங்கிருக்கும் பார்வதி அன்னையின் பெயர் ஸ்ரீ மிருதுபாதநாயகி. மிருதுபாதநாயகி நாயகி என்கிற பெயரைத் தமிழில் பஞ்சினும் மெல்லடியாள் என்கிறார்கள்.
சிவன் பெயரில் அக்னியும், பார்வதி அன்னையின் பெயரில் பஞ்சம் இருப்பதால்தான் இந்த ஊரிலே பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். இக்கோயிலின் மூலவரான ஸ்ரீ அக்னீஸ்வரரின் திருமேனி சற்று சிவந்த நிறமாக உள்ளது. அவரை அக்னிதேவன் வழிபட்டார். ராமேஸ்வரம், சோமேஸ்வரம், நாகேஷ்வரம் போல இத்தலம் அக்னீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.
இத்தலப் பெருமானைப் புகழ்ந்து திருஞானசம்பந்தர் பாடியதால், திருமுறைத் தலங்களின் பட்டியலில் இத்தலம் 232 திருமுறை தலமாக விளங்குகிறது. காவிரி தென்கரைத் தலம் எனும் பொழுது 115வது திருத்தலமாக உள்ளது.
மற்ற கோயில்களைப் போல் அல்லாமல் இங்குள்ள நவகிரகங்களின் சன்னதி ப வடிவில் அமைந்துள்ளது. சனி தோஷம் நீக்கும் திருத்தலமாக இது உள்ளது. இத்தலத்தில் சனி பொங்கு சனியாக உள்ளார். தனி சன்னதி கொண்டு அருள் புரிகிறார். ஏர் கலப்பையுடன் காட்சி தருகிறார். இங்கு வந்து சனி தோஷங்களைப் போக்கிக் கொள்ளலாம்.
இங்கு வந்து வழிபட்டு பில்லி, சூனியம், கிரகதோஷம் சித்தப்பிரமை, செய்வினை ஆகியவற்றை நீக்கிக் கொள்ளலாம்.
ஜோதிடரின் ஆலோசனைப்படி தேங்காய், வாழைப்பழம் என்று பலவற்றையும் மற்றும் ஆலோசனைப் படி மலர்ச்சரம் கட்டுகிறார்கள். இக்கோயிலில் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுகிறார்கள். எள் பொடி கலந்த உணவு, பரிகார ஹோமம், அபிஷேகம், அர்ச்சனை மற்றும் கட்டளை அர்ச்சனை, அன்னதானம் ஆகியவையும் உள்ளன.
திருக்கொள்ளிக்காடு எனும் இவ்வூரை மக்கள் வழக்கில் சுள்ளிக்காடு என்று அழைக்கின்றனர். திருவாரூர் திருத்துறைப்பூண்டி மெயின் ரோட்டில் நெல்லிக்காய் என்று கைகாட்டி உள்ள திசையில் திரும்பி திருநெல்லிக்கா செல்லவேண்டும்.
பின்னர் அங்கிருந்து அருகாமையிலுள்ள தெங்கூர் சென்று, அங்கிருந்து கொள்ளிக்காடு செல்லும் பாதையில் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று கீரழத்தூர் என்னும் கிராமத்தை அடையவேண்டும்.
அதன்பிறகு சிறிது தூரம் சென்று சாலை ஓரத்தில் உள்ள கோயிலை அடையலாம். கோயில்வரை பேருந்து, கார், வேன் போகுமாறு நல்ல தார்ச் சாலை உள்ளது. அதேபோல் கோயில் வரை மினி பஸ் போகிறது .