Kaichineswarar Temple: இந்திரன் சாப விமோசனம் பெற்ற தலம்!
Dec 20, 2022, 05:46 PM IST
இந்திரன் மணலால் லிங்கம் செய்து வழிபட்ட பின்னர் கைகளால் எடுக்க முற்படும்போது கையின் சின்னம் அதில் பதிந்தது.
திருவாரூர் மாவட்டத்தில் கச்சினம் என்ற பகுதியில் அமைந்துள்ளது கைச்சினேஸ்வரர் திருக்கோயில். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 186 ஆவது தேவாரத் தலமாகும். இந்திரன் மணலால் லிங்கம் செய்து வழிபட்ட பின்னர் கைகளால் எடுக்க முற்படும்போது கையின் சின்னம் அதில் பதிந்தது எனவே இத்தலம் கைச்சினம் என அழைக்கப்படுகிறது.
சமீபத்திய புகைப்படம்
தல வரலாறு
கௌதம முனிவர் தனது மனைவி அகலிகையுடன் ஆசிரமத்தில் வசித்து வந்தார். அப்போது அங்கு வந்த இந்திரன் அகலிகை மீது மோகம் கொண்டார். அகலிகையை அடைய விரும்பிய இந்திரன் சதி வேலை செய்தார். அதிகாலையில் ஆற்றுக்குச் செல்லும் வழக்கமுடைய கௌதம முனிவரை விடியும் முன்னரே இந்திரன் சேவலாக மாறி கூவி ஆற்றுக்குக் குளிக்கப் போகச் செய்தார்.
பின்னர் கௌதம முனிவராக உருவெடுத்து இந்திரன் அகலிகையுடன் சேர்ந்து இருந்தார். விடியாததைக் கண்டு உணர்ந்த கௌதம முனிவர் மீண்டும் ஆசிரமத்திற்கு வந்து இந்திரனின் சேலை கண்டு அவருக்குச் சாபம் இட்டார். சாபத்திலிருந்து விமோசனம் அடையச் சிவனை இந்திரன் உருகி வழிபட்டார்.
விமோசனம் பெற வேண்டுமென்றால் மணலால் லிங்கம் செய்து அதனை அபிஷேகம் செய்து வழிபடுமாறு சிவபெருமான் இந்திரனிடம் கூறினார். மணலால் செய்த லிங்கத்தில் அபிஷேகம் செய்ய முடியாமல் பல காலம் வேதனை அனுபவித்து வந்தார் இந்திரன்.
வேதனை தாங்க முடியாத இந்திரன் மணலால் உருவாக்கிய லிங்கத்தைக் கட்டிப்பிடித்து இனி பெண் வாசனையை நுகர மாட்டேன் எனக் கதறி அழுதார். அப்போது அவரது விரல்கள் லிங்கத்தின் மீது பதிந்து விட்டன.
பின்னர் நீண்ட நாளாகச் சாபத்தின் காரணமாகக் கானக வாழ்வில் சிக்கிய இந்திரனுக்குச் சிவபெருமான் சாப விமோசனம் கொடுத்தார்.
தல சிறப்பு
இக்கோயில் கோச்செங்கச் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில் ஆகும். கிழக்கு நோக்கி இந்த கோயில் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் கொடி மரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. மூன்று நிலை கோபுரம் அமைந்துள்ளது அதன் வாயிலையே உள்பிரகாரத்தில் விநாயகர், நவகிரகம், நடராஜர், விதூமலிங்கம், அர்த்தநாரீஸ்வரர், சுப்பிரமணியர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன.
இக்கோயிலில் இறைவி வெள்வளை நாயகி தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். அம்மனின் சுற்றுப் பிரகாரத்தில் ஜேஷ்டா தேவி, துர்கா தேவி, சரஸ்வதி ஆகியோர் காட்சியளிக்கின்றனர். இந்திரன் ஐராவதத்தின் தந்ததால் செய்த வெள்வளையை அம்பிகைக்கு அணிவித்து வழிபட்டதால் இந்த அம்பிகைக்கு வெள்வளை நாயகி எனப் பெயர் உண்டாயிற்று.
இந்திரன் சாபம் விலகியது, தியாகராஜர் காட்சி கொடுத்தது, அகத்தியரின் பிரமஹத்தி தோஷம் விலகியது போன்ற பல சிறப்புகளை இத்தலம் கொண்டுள்ளது. இக்கோயிலில் மேலும் சிறப்பு என்னவென்றால் சீனிவாசன் பெருமாளின் திரு உருவம் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்குச் சொந்தமான நிலத்தைத் தோண்டும் போது இவருடைய திருவுருவம் கிடைத்துள்ளது.
தலம் அமைந்துள்ள இடம்
திருவாரூர்-திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில் இக்கோயில் அமைந்துள்ளது. திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டியிலிருந்து இக்கோயிலுக்குப் பேருந்து வசதிகள் உள்ளன.