HT Yatra: தண்டத்தோடு இருக்கும் முருகன்.. மக்களுக்காக காட்சி கொடுத்த வேலாயுத சுவாமி
Mar 08, 2024, 06:00 AM IST
ஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவன் முருக பெருமான். அறுபடை வீடுகளில் குடிகொண்டு ஆறுமுகம் தனது பக்தர்களை காத்து வருகிறார். தமிழ் மக்களின் குலதெய்வமாக விளங்கி வருகின்றார். உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.
சமீபத்திய புகைப்படம்
பல்வேறு விதமான வடிவங்களில் பல கோயில்களில் முருக பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அனைத்து கோயில்களுமே மிகவும் சிறப்புமிக்க கோயிலாக திகழ்ந்து வருகின்றது. அந்த சிறப்புமிக்க கோவில்களில் வரிசையில் ஒன்றுதான் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில்.
இந்த திருக்கோயில் திருப்பூர் மாவட்டத்தில் ஊதியூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் முருக பெருமான் ஒரு கையில் தண்டம் ஏந்தி இடது கையை இடுப்பில் வைத்து மலர் அலங்காரத்தோடு மிகச் சிறப்பாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்.
தலத்தின் சிறப்பு
மலையின் உச்சியில் அமைந்திருக்கக் கூடிய வேலாயுத சுவாமி பலருக்கு குலதெய்வமாக திகழ்ந்து வருகின்றார். இந்த ஊரில் இருக்கக்கூடிய மக்கள் எந்த சுப காரியங்கள் செய்தாலும் வேலாயுத சுவாமியின் அனுமதி பெற்று செல்கின்றனர். இதன் காரணமாக தங்களுடைய காரியத்தில் எந்த தடையும் ஏற்படுவதில்லை என பக்தர்கள் நம்புகின்றனர்.
திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் இருக்கக்கூடியவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று வேலாயுத சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்து வழிபட்டால் அனைத்து விதமான நல்ல பலன்களும் உடனடியாக கிடைக்கும் என கூறப்படுகிறது.
இந்த கோயிலில் கொங்கண சித்தர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட முருக பெருமானின் விக்ரகம் இங்கு இருக்கின்றது. தற்போது மகா மண்டபத்தில் இந்த விக்கிரகம் வழிபாடுக்காக வைக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் செய்யப்படும் அனைத்து விதமான வழிபாடு முறைகளும் இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய முருகப் பெருமானுக்கு செய்யப்படுகிறது.
தல வரலாறு
சித்தர்களின் முதன்மையாக விளங்க கூடியவர் அகத்தியர். அவருடைய சீடராக கொங்கனர், போகர், தேரையர் உள்ளிட்டோர் இருந்து வந்தனர். இவர்கள் அனைவரும் பசியால் வாடிய மக்களுக்கு தங்களது யோகா ஆற்றலால் பல நன்மைகளை செய்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர்.
காங்கேய நாட்டு மக்களின் வறுமையை போக்குவதற்காக அனைத்து மக்களையும் ஒன்று சேர்த்து மூலிகையால் நிறைந்திருந்த இந்த மலையை தீ வைத்து புகை மூட்டி ஊதியுள்ளனர். அதன்பின்னர் முருகப்பெருமான் அந்த இடத்தில் எழுந்தருளி பக்தர்களின் வறுமையை நீக்கியுள்ளார்.
முருகனை வேண்டி ஒரு மலையை தீவைத்து அனைவரும் ஊதியதால் இந்த மலை ஊதிமலை என அழைக்கப்பட்டுள்ளது. கொங்கண சித்தர் இங்கே நெருப்பு ஊதி பொன் தயாரித்த காரணத்தினால் இது பொன் ஊதிமலை எனவும் அழைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இரவு நேரங்களில் சித்தர்கள் ஒலி வடிவமாக வந்து இங்கு வீற்றிருக்கக்கூடிய முருக பெருமானை வழிபட்டு செல்வதாக பக்தர்கள் இன்றளவும் நம்பி வருகின்றனர்.
அமைவிடம்
இந்த திருக்கோயில் திருப்பூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல வாகன வசதிகள் மற்றும் பேருந்து வசதிகள் அனைத்தும் உள்ளன.
இந்த கோயில் காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை திறந்திருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9