Sathuragiri Hills: மீண்டும் அனுமதி.. பக்தர்களே சதுரகிரி மலையேற ரெடியா? - கட்டுப்பாடுகள் என்னென்ன தெரியுமா?
Jan 23, 2024, 08:21 AM IST
Sathuragiri Temple: இரண்டு மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் அமைந்துள்ளது. தரைமட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் இருக்கும் இந்த கோயிலுக்கு அடர்ந்த வனப்பகுதிகளை கடந்து கரடுமுரடான மலை பாதையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.
சமீபத்திய புகைப்படம்
இந்திர மலை, ஏம மலை, வருண மலை, குபேர மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது சதுரகிரி மலை. இம்மலையில் ஐந்து கோயில்கள் உள்ளன. மகாலிங்கம், சுந்தரமூர்த்தி லிங்கம், சந்தன மகாலிங்கம், இரட்டை லிங்கம், காட்டு லிங்கம். இங்குள்ள மூலஸ்தான சுவாமி சுந்தர மகாலிங்கம் சாய்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஆடி அமாவாசை, தை அமாவாசைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும். பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, சிவராத்திரி அன்று இம்மலைக்கு பக்தர்கள் மலையேறி வழிபட வருகின்றனர். இவை தவிர மாதந்தோறும் அமாவாசை, பெுளர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்குவது வழக்கம். மாதம் தோறும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.
இதற்கிடையில், தொடர் மழை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தை மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமி வழிபாட்டுக்காக ஜனவரி 23 (இன்று) முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.
காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதைகளில் அமைந்துள்ள நீரோடைகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரவு கோயிலில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கோயிலுக்கு எடுத்து வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலை ஏற அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்து ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் தடை விதிக்கப்படும் எனவும் வனத்துறையினர் கூறியுள்ளனர். மீண்டும் மழை பெய்தால் அனுமதிக்கப்பட்ட நாட்களில் தடை விதிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்