அண்ணாமலையாரும்..புயலைத் தடுக்கும் கார்த்திகை மகா தீபமும்..!
Nov 24, 2023, 07:30 AM IST
Tiruvannamalai Karthigai Deepam: திருவண்ணாமலையில் மகா தீபத்தை ஏற்றுவதால் புயல் ஏற்பட்டாலும் அதன் வேகம் தடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. புயல் போல துன்பங்கள் வந்தாலும் தீபதரிசனம் செய்தால் அது நீங்கிவிடும் என்ற தத்துவத்தையும் இது உணர்த்துவதாக உள்ளது.
12 தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் மிகச் சிறப்பான மாதம் ஆகும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதங்கள் என்கிறோம். பிரபஞ்சம் என்பது கடவுளுக்குச் சமமானது என்பது பொருள். கடவுளே பஞ்ச பூதமாக இருக்கிறார். இயற்கையும், இறைவனும் ஒன்றே என்ற அடிப்படையில் பஞ்ச பூத தலங்களை வகைப்படுத்தி இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.
சமீபத்திய புகைப்படம்
மண்ணுக்கு காஞ்சிபுரம், நீருக்கு வானைக்கா, அக்னிக்கு திருவண்ணாமலை, காற்றுக்கு காளகஸ்தி, ஆகாயத்துக்கு தில்லையம்பதி எனப் பஞ்சபூதத் திருத்தலங்களாகத் திகழ்ந்து வருகின்றன. அந்தவகையில், பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னி திருத்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உள்ளது.
அண்ணாமலை என்பது எவரும் எளிதில் நெருங்க முடியாத சிகரம் எனப் பொருள்படும். இங்கே சர்வேஸ்வரனான சிவபெருமான் சோதி வடிவமாய்க் காட்சியளித்து அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் விசேஷமாகும். 'கார்த்திகை மாதத்தில் தீப தரிசனம் பாப விமோசனம்' என்பர். வீடு மற்றும் திருக்கோயில்களில் நாள்தோறும் விளக்கு ஏற்றுவது மிக அவசியம். காலை, மாலையில் வீட்டில் விளக்கேற்றும் கடமை பெண்களுக்கு உரியது. அது எவ்வளவு உயரமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு வாழ்வும் உயரும் என்பது ஐதீகம்.
திருக்கார்த்திகை தினத்தன்று அண்ணாமலையார் திருக்கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் 'மகா தீபம்' ஏற்றப்படுகிறது. இதற்காக ஆறு அடி உயர ராட்சத கொப்பரை பயன்படுத்தப்படும். இந்த கொப்பரை தீபம் மேல்பாகம் மூன்றே முக்கால் அடி, கீழ்பாகம் இரண்டே முக்கால் அடி சுற்றளவு கொண்டிருக்கும். 150 கிலோ எடையில் கால் இன்ச் தடிமனுடன், 20 வளைய ராடுடன் கூடிய செப்பு தகட்டில் செய்யப்பட்டு வண்ணம் பூசப்பட்டு 'சிவ சிவ' என வாசகம் எழுதப்பட்டு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபத்தை ஏற்றுவதால் புயல் ஏற்பட்டாலும் அதன் வேகம் தடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. புயல் போல துன்பங்கள் வந்தாலும் தீபதரிசனம் செய்தால் அது நீங்கிவிடும் என்ற தத்துவத்தையும் இது உணர்த்துவதாக உள்ளது.
அண்ணாமலையாருக்கு அரோகரா..அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற தெய்வீக முழக்கத்துடன் திருவண்ணாமலையின் உச்சியில் கார்த்திகைத் தீபத்தை அதாவது சிவபெருமானின் விசுவரூப தரிசனத்தைத் தரிசித்து பேறு பெறலாம்..!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.