TNPSC: 'மாணவர்கள் வாழ்க்கையுடன் டி.என்.பி.எஸ்.சியும், அரசும் விளையாடுவதா' அன்புமணி ஆவேசம்
தேர்வர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொகுதி 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய தலைவரையும், 10 உறுப்பினர்களையும் உடனடியாக நியமிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

10 மாதங்களாகியும் வெளியிடப்படாத குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில் மாணவர்கள் வாழ்க்கையுடன் டி.என்.பி.எஸ்.சியும், அரசும் விளையாடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பு உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"தமிழக அரசுத் துறைகளில் தொகுதி 2, 2 ஏ பணிகளில் சேர்ந்து விடலாம் என்று ஆவலுடன் காத்திருந்த போட்டித்தேர்வர்களை தமிழக அரசும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கின்றன. தொகுதி 2, 2 ஏ தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் திருத்தும்பணி 80% நிறைவடைந்து விட்டது, மீதமுள்ள பணிகளும் முடிக்கப்பட்டு திசம்பர் முதல் வாரத்தில் 6000 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கைகளால் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், திசம்பர் இரண்டாவது வாரம் நிறைவடைந்தும் எதுவும் நடக்கவில்லை. போட்டித்தேர்வு எழுதியவர்களின் மன உளைச்சல் அதிகரித்தது தான் மிச்சம்.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள இரண்டாம் தொகுதி பணியிடங்கள் 121, தொகுதி 2ஏ பணியிடங்கள் 5097 ஆகியவற்றை நிரப்புவதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அப்பணிகளுக்கான முதனிலைத் தேர்வு முடிவுகள் முடிந்து கடந்த பிப்ரவரி 25-ஆம் நாள் நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் மாதம் வரை வெளியிடப்படாததை கடந்த நவம்பர் 6-ஆம் தேதி அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால், தாமதமே இல்லை; திசம்பரில் முடிவு வெளியிடப்படும் என்று அமைச்சர் அளித்த வாக்குறுதி காற்றுடன் கலந்து விட்டது. ஆமையிடமும் வீழும் வேகத்தில் தான் டி.என்.பி.எஸ்.சி செயல்படுகிறது.