தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Thamimum Ansari: ‘இஸ்லாமியர்கள் உங்களுக்கு இலவச ஓட்டா?’ ம.ஜ.க., பொதுச் செயலாளர் அன்சாரி ஆவேசம்!

Thamimum Ansari: ‘இஸ்லாமியர்கள் உங்களுக்கு இலவச ஓட்டா?’ ம.ஜ.க., பொதுச் செயலாளர் அன்சாரி ஆவேசம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Oct 07, 2023 11:15 AM IST

MK Stalin: ‘சும்மா ஆளுநரிடம் மடைமாற்றிவிடக் கூடாது. ஆளுநரிடம் அனுப்பிவிட்டோம் என்று கூறி, பந்தை அவர் பக்கம் தள்ளிவிடப் பார்க்கிறார்கள். அந்த ஏமாற்று வேலை செய்ய கூடாது. உங்களை விடுதலை செய்யச் சொல்லி நாங்கள் சொல்லவில்லை. அந்த நம்பிக்கை, நேற்றோடு எங்களுக்கு போய்விட்டது’

இஸ்லாமிய சிறை கைதிகள் தொடர்பாக, மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளர் தமிமும் அன்சாரி அளித்த பேட்டி
இஸ்லாமிய சிறை கைதிகள் தொடர்பாக, மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளர் தமிமும் அன்சாரி அளித்த பேட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

இபிஎஸ் உடன் சந்திப்பு ஏன்?

‘‘காக்கை உட்கார்ந்து பனை பழம் விழுந்தது போல தான், நான் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அவர்களை சந்தித்ததும் நடந்ததும். கட்சி தொடங்கப்பட்ட 8 ஆண்டுகளாக குரலற்றவர்களின் குரலாக நாங்கள் இருக்கிறோம். 7 பேர் விடுதலைக்கு குரல் கொடுத்தோம்.

இப்போது, இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை தொடர்பாக முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் எங்களுக்கு சீட் ஒதுக்கவில்லை. ‘பரவாயில்லை.. 5 அம்ச கோரிக்கையை தருகிறோம். அதில் ஒன்று இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்’ என்பதும் ஒன்றும். 

திமுகவிற்காக சமரசம் செய்தோம்

கமலஹாசனிடம் இருந்து, டிடிவி.,யிடம் இருந்து கூட அழைப்புகள் வந்தது. ஆனாலும், வாக்குகள் சிதறிவிடக்கூடாது, மதவாத சக்திகள் காலூன்றிவிடக்கூடாது என்பதற்காக திமுக பக்கம் நின்றோம். பிரசாரமும் செய்தோம். நீண்ட கால இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்யக் கோரி தொடர்ந்து சிறை முற்றுகை போராட்டம் செய்து வருகிறோம். 

கடைசியாக நடந்த போராட்டத்தில் நான் பேசியிருந்தேன், ‘இது தொடர்பாக முதல்வரிடம் பேச, அனுமதி கேட்டும், அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை’ என்று. சட்டமன்றம் கூடும் நேரத்தில், பாஜகவை தவிர எம்.எல்.ஏ.,க்களை வைத்திருக்கும் அனைத்து கட்சியினரையும் சந்திக்க முடிவு செய்தோம். அந்த அடிப்படையில் பலரையும் சந்தித்து வருகிறேன். தொடர்ச்சியாக, எதிர்கட்சியின் அடிப்படையில் அதிக எம்.எல்.ஏ.,க்கள் வைத்திருக்கும் அதிமுக பொதுச் செயலாளரை சந்திக்கலாம் என்று தான் போனோம். 

அதிமுக உடன் கூட்டணியா?

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்த நேரத்தில் இந்த சந்திப்பு நடந்தது, பரபரப்பாகிவிட்டது. உண்மையில் பாஜக கூட்டணியில் அதிமுக இருந்திருந்தால், நாங்கள் யோசித்திருப்போம். அவர்கள் செயல்பட்டாலும், பாஜக செயல்படவிடாது. இப்போ வெளியே வந்த பின், அதிமுக மீது ஒரு தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. வழக்கறிஞர்கள், நிர்வாகிகளிடம் கேட்டு ஒரு முடிவு எடுக்கிறேன் என இபிஎஸ் கூறினா். 

பேரறிவாளன் விவகாரத்தில் அதிமுக தான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. எல்லா கட்சி தலைவர்களும், கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு ஆதரவு தருவதாக கூறியுள்ளனர். இந்த சந்திப்பை தேர்தலோடு ஒப்பிடக் கூடாது. தேர்தல் நிலைப்பாடு டிசம்பர் இறுதியில் தான் தெரியவரும். மாதத்திற்கு ஒருமுறை அரசியல் மாறும். தேர்தல் நேரத்தில் வாரத்திற்கு ஒரு முறை அரசியல் மாறும். இன்னும் காலம் இருக்கிறது, அவசரப்படக் கூடாது. கட்சிகளின் நடவடிக்கையை கூர்ந்து பார்த்து தான் முடிவு செய்ய முடியும். 

நேரம் கூட தர மறுக்கும் முதல்வர்

பரோலில் வந்த போது கூட, இஸ்லாமிய சிறை கைதிகளால் இவர்களால் யாருக்கும், யாரால் இவர்களுக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. நன்னடத்தை அடிப்படையில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் அவர்களை விடுதலை செய்யலாம். இதற்காக சந்திக்க முதல்வரிடம் நேரம் கேட்டோம், அவர் தரவில்லை.

161 ல் அமைச்சரவையை கூட்டி தீர்மானம் போடுவதில், உங்களை எது தடுக்கிறது? அதை ஆளுநர் தடுக்க முடியாது. தீர்மானத்தை வேண்டுமானால், ஆளுநர் நிராகரிக்கலாமே தவிர, தீர்மானம் போடக்கூடாது என்று சொல்லும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. நீங்கள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியது தானே?

கோவை குண்டு வெடிப்பு தொடர்பான ஜாமின் வழக்கில், தமிழக அரசு தான் அதை எதிர்த்திருக்கிறது. கடந்த 6 மாதத்தில், 3 முறை ஜாமினை தடுத்திருக்கிறது தமிழக அரசு. நீங்க தீர்மானம் போடுங்க, அந்த தீர்மானத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தில் போராடி எங்களால் மீட்க முடியும்.

ஆளுநர் பக்கம் பந்தை தள்ளாதீங்க!

சும்மா ஆளுநரிடம் மடைமாற்றிவிடக் கூடாது. ஆளுநரிடம் அனுப்பிவிட்டோம் என்று கூறி, பந்தை அவர் பக்கம் தள்ளிவிடப் பார்க்கிறார்கள். அந்த ஏமாற்று வேலை செய்ய கூடாது. உங்களை விடுதலை செய்யச் சொல்லி நாங்கள் சொல்லவில்லை. அந்த நம்பிக்கை, நேற்றோடு எங்களுக்கு போய்விட்டது. எப்போ ஜாமினை எதிர்த்து மூன்று முறை போனீர்களோ, அப்போதே நம்பிக்கை போய்விட்டது. 

ஆனால், தீர்மானம் போட வேண்டியது உங்கள் கடமை. அதை செய்யுங்க, நாங்கள் மேலே பார்த்துக் கொள்கிறோம். இதை செய்வதில் திமுகவிற்கு என்ன தடுக்கிறது? பாஜகவிற்கு பயப்படுகிறீர்களா? உண்மையை சொல்லுங்கள்? கனத்த மவுனமா இருக்கீங்க? இதுக்காக ஆதிநாராயணன் ஆணையம் போட்டீங்க, அப்பவே அதை கண்துடைப்பு என்றார்கள். நாங்கள் அதையும் நம்பியிருந்தோம். அந்த ஆணையம் எத்தனை முறை கூடியது? அதன் முகவரி என்ன? யாரிடம் கருத்து கேட்டது?  ஆணையத்தை காணவில்லை என சமூக வலைதளத்தில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். 

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?

49 பேருக்கு நாங்கள் ஆளுநரிடம் பரிந்துரைத்திருக்கிறோம் என்று கூறிவிட்டு, இங்கே வந்து உச்சநீதிமன்றத்தில் ஜாமினை எதிர்த்தால் என்ன அர்த்தம்? இது டபுள் கேம் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். இது மதம் சார்ந்த பிரச்னை அல்ல; நீதி சார்ந்த பிரச்னை. தேர்தல் வாக்குறுதியில் இதை கொடுத்தீர்களே? அதை நிறைவேற்றுவதில் உங்களுக்கு என்ன சிக்கல்?

நாங்கள் என்ன பூட்டை உடைத்தா விடுதலை செய்ய சொல்கிறோம்? 4, 5 ஆண்டுகள் சிறையில் இருப்பவர்களையா விடுதலை செய்ய சொல்கிறோம்? 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களை சட்டத்தின் படி விடுதலை செய்ய சொல்கிறோம், அதில் என்ன பிரச்னை?

வாக்கை அள்ளிக் கொடுத்தோம்

தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்தீர்களே? சிந்தாமல் சிதறாமல் , பாஜக கால் ஊன்றிவிடக்கூடாது என்பதற்காக திமுகவிற்கு வாக்களித்த இஸ்லாமிய மக்களிடம் நீங்கள் வாக்குறுதி கொடுத்தீர்கள். இந்த மக்களின் வாக்குகளில் தான், இந்த ஆட்சி அமைந்தது. பல பேர் பின்தங்கி இருந்தார்கள், முஸ்லிம் பகுதி வாக்குகள் தான் அவர்களை வெற்றி பெற வைத்தது. உதாரணம், துறைமுகம் தொகுதியில் அண்ணன் சேகர்பாபு வெற்றி.

அப்படிப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல், மவுனமாக இருக்கிறீர்கள், இது எவ்வளவு பெரிய கொந்தளிப்பா இருக்கு தெரியுமா? உளவுத்துறை சரியாக செய்தி கொடுத்தும், முதல்வர் அசால்டா இருக்கிறார் என்றால், முஸ்லீம்களை இலவச வாக்காளரா அவர் நினைக்கிறாரா?

இந்த விவகாரத்தில் தான் நான் திமுகவை விமர்சிக்கிறேன். மற்றபடி திமுகவையோ, அதன் கொள்கைையையோ நான் விமர்சிக்கவில்லை. இந்த விசயத்தில் யார் செய்தார் என்று பார்க்காமல், சட்டம் எத்தகைய வழிமுறை தந்திருக்கிறது என் பாருங்கள்.

ஆளுநர் கை காட்டி, இவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆளுநர் ரவி மீது எங்களுக்கு கடுமையான விமர்சனங்கள் எங்களுக்கு இருக்கு. இவருடைய நடவடிக்கைகள், தமிழ்நாட்டிற்கு எதிரானது தான். ஆனால், இந்த விசயத்தில் ஆளுநர் பக்கம் பந்தை தள்ளிவிட முடியாது. உங்களிடம் தான் பந்து இருக்கிறது. நீங்கள் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றுங்க, அவர் ஆளுநர் நிராகரித்தால் அவரது மாளிகையை முற்றுகையிடலாம். 

தமிழக அரசு தவறு செய்கிறது

திமுக அரசு வந்ததுமே, ஒரு தீர்மானம் போட்டது. அதில் தான் மதக்கலவரம் செய்தவர்களை விடுதலை செய்யக் கூடாது என்பதுபோன்ற தீர்மானத்தை போட்டார்கள். இதை மத்திய அரசு மீது குற்றம் சாட்ட முடியாது. சில தவறான அதிகாரிகள் பேச்சை கேட்டு தமிழக அரசு தவறு செய்கிறார்கள். முதல்வர் உரிய அக்கறை எடுத்திருந்தால், இந்த சிக்கலே வந்திருக்காது. 

அவ்வளவு எளிதா, இந்த சமூகத்தை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறார்களா? கேட்க நாதியில்லை என்று நினைக்கிறார்களா? பாஜகவை காட்டி காட்டி ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்களா? மனசாட்சி இருக்க வேண்டும்! உங்களுக்கு சிந்தாமல் சிதறாமல் 90 சதவீதத்திற்கு மேல் வாக்களித்தார்கள். உங்களிடம் அவர்கள் கேட்ட ஒரே கோரிக்கை, சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான். அதில், விடுதலையை கூட விடுங்கள், ஜாமினுக்கு கூட இவ்வளவு வன்மம் காட்டினீர்கள் என்றால், சிறுபான்மை மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறீர்களா? 

எங்கள் இதயம் உடைந்திருக்கிறது

திராவிட இயக்கத்தின் முகவரியான ஸ்டாலின், இதை செய்யலாமா? முன்பு மாதிரி முஸ்லிம்கள் இப்போது இல்லை. இப்போது, பச்சை கொடியை காட்டினால் ஓட்டு போடும் முஸ்லிம்கள் இல்லை. பெண்கள், இளைஞர்கள் அரசியல் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்,  விவாதிக்கிறார்கள். திமுக செய்த அரசியல் தவறுகள், எங்கள் இதயத்தை உடைத்திருக்கிறது. நம்பிக்கையை நாசம் செய்திருக்கிறது. 

எல்லா கட்சிகளும் இஸ்லாமிய சிறை கைதிகள் விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கிறார்கள். மதுரை மாநாட்டில் அதிமுக ஆதரவு தீர்மானம் போட்டிருக்கிறது. பாமக தீர்மானம் போட்டிருக்கிறது. விசிக, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட எல்லா கட்சிகளும் ஆதரிக்கின்றன. அப்படியிருக்க, முதல்வரை எது தடுக்கிறது? இதை பார்க்கும் போது, பாஜகவை பார்த்து திமுக பயப்படுகிறதா என்று தான் தெரிகிறது.

பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியே வந்த பின், இஸ்லாமியர்களின் பார்வை அதிமுக பக்கம் திரும்பியிருக்கிறது. அவர்கள் வெளியே வந்த பின், பலர் சமூக வலைதளத்தில் ஆதரவு கருத்து வெளியிடுகிறார்கள். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. மதவாத கூட்டணியில் இருந்து வெளியே வந்ததும், மக்கள் நம்மை பாராட்டுகிறார்கள் என்கிற நம்பிக்கை அதிமுகவிற்கு வரும். நாங்கள் வாக்களிக்கவில்லை என்கிற கசப்பில் இருந்த அதிமுகவினர் பலருக்கு இது நம்பிக்கை தந்திருக்கிறது,’’

என்று அந்த பேட்டியில் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்