RCB vs DC: 47 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி
RCB vs DC: ஐ.பி.எல் சீசனில் 62ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி அபாரவெற்றி பெற்றது.
RCB vs DC: 17ஆவது ஐ.பி.எல் சீசனில், 62ஆவது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியானது பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. மாலை 7:30 மணிக்குத் தொடங்கிய இப்போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று, ஃபீல்டிங்கினை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலியும் அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸும் களமிறங்கினர். இதில் கோலி 13 பந்துகளுக்கு 27 ரன்கள் விளாசியபோது, சர்மாவின் பந்தில் அபிஷேக் போரேலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். டூபிளெஸ்ஸிஸ் 6 ரன்கள் மட்டுமே எடுத்தபோது முகேஸின் பவுலிங்கில் அவுட்டானார். அதன்பின் மூன்றாவதாக வில் ஜாக்ஸும், நான்காவதாக ரஜட் பட்டிடரும் களமிறங்கினர்.
இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் வில் ஜாக்ஸ் 41 ரன்கள் எடுத்தபோது, குல்தீப் யாதவின் பவுலிங்கில் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ரஜட் பட்டிடர், 52 ரன்கள் எடுத்தபோது, ரஷிக் சலாம் பவுலிங்கில் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய கேமரூன் கிரீன் இறுதிவரை நிதானமாக ஆடினார். அவருக்கு அடுத்து வந்த மஹிபல் லொம்ரோர் 13 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் ஸ்வனில் சிங் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல், அவுட்டாகினர். பின் களமிறங்கிய கரண் சர்மா 6 ரன்கள் எடுத்தபோது ரன் அவுட் ஆனார். முகமது சிராஜூம் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தார்.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும், ரஷிக் சலாம் 2 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக கைப்பற்றினர்.
சேஸிங்கில் ஈடுபட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி:
அதன்பின் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் 1 ரன் எடுத்து, சுவப்நில் சிங் பந்தில் ஜாக்ஸிடம் கேட்ச் கொடுத்துவிட்டு சட்டென பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் இரண்டாவதாக களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வீரரான ஜக் ஃப்ரசெர் மக்குர்க் 21 ரன்கள் எடுத்தபோது ரன் அவுட் ஆனார். அதன்பின், களமிறங்கிய அபிஷேக் போரேல், 2 ரன்கள் மட்டுமே எடுத்தபோது, யாஷ் தயாளின் பவுலிங்கில் ஃபெர்கஷனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின், சாய் ஹோப் 29 ரன்கள் எடுத்தபோது ஃபெர்கஷனின் பந்தில், சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின், அடுத்து வந்த குமார் குஷக்ராவும் 2 ரன்கள் எடுத்தபோது சிராஜிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் அக்சர் பட்டேல், நிதானமாக ஆடி 57 ரன்கள் குவித்து அவுட் ஆனார். திரிஸ்டன் ஸ்டப்ஸ் 3 ரன்களில் ரன் அவுட் ஆனார். மேலும், ரஷிக் சலாம் 10 ரன்களும், குல்தீப் யாதவ் 6 ரன்களும், முகேஷ் குமார் 3 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். இறுதியாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி 19.1 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சார்பில், யாஷ் தயாள் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
24 பந்துகளுக்கு 32 ரன்கள் எடுத்தும்; 19 பந்துகள் வீசி ஒரு விக்கெட்டும் எடுத்த ஆர்சிபி வீரருமான கேமரூன் கிரீன் ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ ஆனார்.
டாபிக்ஸ்