தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  6 Years Of Ammk: 6 ஆம் ஆண்டில் அமமுக! அவசியமா? அநாவசியமா?

6 Years Of AMMK: 6 ஆம் ஆண்டில் அமமுக! அவசியமா? அநாவசியமா?

Kathiravan V HT Tamil
Mar 15, 2023 11:12 AM IST

அமமுக தொடங்கப்பட்ட காலத்தில் டிடிவி தினகரனுக்கு பக்கபலமாக நின்ற நிர்வாகிகளில் ஒருவர் கூட தற்போது இல்லை. சிலர் இறந்துவிட்டனர். பலர் கட்சி மாறிவிட்டனர்.

2018ஆம் ஆண்டு மதுரை மேலூரில் நடந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சி தொடக்க நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் உடன் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் மற்றும் செந்தமிழன்
2018ஆம் ஆண்டு மதுரை மேலூரில் நடந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சி தொடக்க நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் உடன் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் மற்றும் செந்தமிழன்

ட்ரெண்டிங் செய்திகள்

புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றிருந்த நிலையில், கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையும் ஒரே நபரிடத்தில் இருக்க வேண்டும் என கூறி கூட்டம் கூட்டமாக போயஸ்கார்டனுக்கு சென்று சசிகலாவிடம் மன்றாடினர் ரத்தத்தின் ரத்தங்கள்.

சசிகலா உடன் டிடிவி தினகரன்
சசிகலா உடன் டிடிவி தினகரன்

8 ஆண்டு கால அரசியல் வனவாசம்

’அம்மாவுக்கு அடுத்து சின்னம்மா நீங்கத்தான் எங்கள வழிநடத்தனும்’ என கண்ணீர் மல்க கெஞ்ச; ’அக்காவை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் நான் மீண்டு வரவில்லை’ என சசிகாவும் கண்ணீர் விட அருகில் இருந்த டிடிவி தினகரன் தன் கைக்குட்டையை சசிகலா கையில் கொடுக்க அதை வாங்கி குளமான தன் கண்களை துடைத்துக் கொண்டார் சசிகலா. இவ்வாறாக 8 ஆண்டுகால அரசியல் வனவாசத்திற்கு பிறகு மீண்டும் தமிழக மக்களுக்கு மீண்டும் அறிமுகமான டிடிவி தினகரன்.

சொத்துக்குவிப்பு வழக்கு பிரச்னைகளுக்கு பின் சசிகலா சிறை செல்ல, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராகவும், அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை அறிவிவித்துவிட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறை சென்றார் சசிகலா.

ஓ.பன்னீர் செல்வத்தின் தர்மயுத்தம்
ஓ.பன்னீர் செல்வத்தின் தர்மயுத்தம்

தொப்பி சின்னததில் டிடிவி

ஜெயலலிதா இறந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முயன்ற நிலையில் பன்னீர் நடத்திய தர்மயுத்ததால் முடக்கப்பட்டது அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலை.

இதனால் அதிமுக அம்மா என்ற அணியின் பெயரில் தொப்பி சின்னத்தில் பரப்புரையை தொடங்கிய டிடிவிக்கு ஆதரவாக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சர் பட்டாளமே களத்தில் இறங்கியது.

டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னத்தில் தொப்பி அணிந்தபடி வாக்கு கேட்கும் ஈபிஎஸ்
டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னத்தில் தொப்பி அணிந்தபடி வாக்கு கேட்கும் ஈபிஎஸ்

சிறைவாசம்

டிடிவிக்கு எதிராக பன்னீர் செல்வம் அணி சார்பில் மதுசூதனன் களமிறங்க களைகட்டி இருந்தது ஆர்.கே.நகர் தேர்தல் ’வைட்டமின் ப’ வெள்ளம் போல் பாய்ந்ததாக பேசப்பட்ட நிலையில் அமைச்சர் ஒருவரின் வீட்டில் நடந்த ரெய்டில் 89 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இதனையெடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்திய நிலையில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதியப்பட்ட புகாரில் டிடிவி தினகரன் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன்
கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன்

கழற்றிவிடப்பட்ட டிடிவி

பின்னர் ஜாமீனில் தினகரன் வெளியே வந்த நிலையில் சசிகலா மற்றும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக எடப்பாடி பழனிசாமியும் அவர்களது அமைச்சரவை சகாக்களும் அறிவித்தனர்.

இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது. கடைசியாக 18 எம்.எல்.ஏக்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த நிலையில் அவர்களை தகுதிநீக்கம் செய்தார் சபாநாயகர்.

டிடிவி தினகரனுக்கு ஒதுக்கப்பட்ட குக்கர் சின்னம்
டிடிவி தினகரனுக்கு ஒதுக்கப்பட்ட குக்கர் சின்னம்

ஆர்.கே.நகரில் அமோக வெற்றி

2017ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி மீண்டும் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு 89,063 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் டிடிவி தினகரன்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உதயம்

அதிமுகவில் இருந்து கழற்றிவிடப்பட்ட நிலையில், சிறையில் இருந்த சசிகல அதிமுகவுக்கு உரிமை கோரும் வகையில் சட்டப்போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், அரசியல் போராட்டத்தை கையில் எடுக்க ஏதுவாக கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி மதுரை மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் தினகரன்.

உண்மையான அதிமுக நாங்கள்தான் என்றும் இரட்டை இலை சின்னத்தை மீட்கவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கி உள்ளதாக கூறிய டிடிவி தினகரனுக்கு பக்கபலமாக எம்.எல்.ஏக்களாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, பழனியப்பன், தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் இருந்தனர்.

அதிமுகவின் கொடியின் நிறமான கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தின் மத்தியில் ஜெயலலிதாவின் படத்தை கொண்ட கொடி அமமுகவின் அதிகாரப்பூர்வ கொடியாக அறிவிக்கப்பட்டது.

நாஞ்சில் சம்பத், திராவிட இயக்க பேச்சாளர்
நாஞ்சில் சம்பத், திராவிட இயக்க பேச்சாளர்

டிடிவி தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ’திராவிடம்’ என்ற பெயர் இல்லை என்று கூறி கட்சியில் இருந்து விலகினார் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.

செந்தில் பாலாஜி விலகல்

2018 ஆம் ஆண்டு டிசம்பரில் கட்சிக்கு பக்கபலமாக இருந்த செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவிய நிலையில் 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளில் போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அப்போது நடந்த 22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் அமமுக தோல்வி அடைந்தது

நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக 22 லட்சத்து 25 ஆயிரத்து 377 வாக்குகளை பெற்று 5.46 சதவீத வாக்குவங்கியை தக்க வைத்து கொண்ட நிலையில், தேர்தல் தோல்விக்கு பிறகு அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.

தங்கத் தமிழ்ச்செல்வன்
தங்கத் தமிழ்ச்செல்வன்

தங்கத் தமிழ்ச்செல்வன் விலகல்

2020இல் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த வெற்றிவேல் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், மற்றொரு ஆதரவாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் திமுகவுக்கு சென்றார்.

அடுத்து நடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 171 தொகுதிகளில் அமமுக போட்டியிட்ட நிலையில் 10 லட்சத்து 88ஆயிரத்து 789 வாக்குகளை பெற்ற நிலையில் அக்கட்சியின் வாக்கு வங்கி 2.36 சதவீதமாக குறைந்தது. கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட டிடிவி தினகரனும் தோல்வி அடைந்தார்.

இரட்டை இலை சின்னம்
இரட்டை இலை சின்னம்

தேர்தலின் போது 73 இடங்களில் அதிமுகவுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்துவோம் என அமமுகவினர் கூறிய நிலையில் 17 இடங்களில் வாக்குகளை பிரித்ததால் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றியை பாதிக்க செய்தது.

மன்னார்குடி, காரைக்குடி, உத்திரமேரூர், நெய்வேலி, மயிலாடுதுறை, பாபநாசம், கந்தர்வக்கோட்டை, பாபநாசம், தென்காசி, ஆண்டிப்பட்டி, ராஜபாளையம், சாத்தூர், திருவாடனை, நாங்குநேரி, சங்கரன்கோயில், வாசுதேவநல்லூர் ஆகிய தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பிரித்ததால் அதிமுகவின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக இருந்தது.

சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு டிடிவி தினகரனின் மற்றொரு ஆதரவாளர் பழனியப்பனும் திமுகவில் இணைந்த நிலையில் ஏராளமான நிர்வாகிகள் தாய் கழகமான அதிமுகவில் இணைந்தனர்.

இந்த நிலையில் புரட்சித்தலைவி அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைத்திட 6ஆம் ஆண்டில் சபதம் ஏற்போம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவோம் என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் டிடிவி தினகரன். 

அமமுக தொடங்கப்பட்ட காலத்தில் டிடிவி தினகரனுக்கு பக்கபலமாக நின்ற நிர்வாகிகள் தற்போது ஒருவர் கூட தற்போது இல்லை. சிலர் இறந்துவிட்டனர். பலர் கட்சி மாறிவிட்டனர். வாக்குகளை பிரிக்கும் யுக்தியை வைத்து அதிமுகவிக்கு நெருடிக்கடி வேண்டுமானால் அமமுக கொடுக்கலாமே ஒழிய நீண்ட கால கட்சி வளர்ச்சிக்கு உதவாது என்பது அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது. 

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை எம்.பிக்கள் அமமுக சார்பில் நாடாளுமன்றம் செல்கிறார்கள் என்பதை பொறுத்தே அக்கட்சி அவசியமா? அநாவசியமா? என்பது தீர்மானிக்கப்படும் நிலையில் வரும் தேர்தலில் பெரும் வாக்கு வங்கியே அக்கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க தேவைப்படும் ஆக்சிஜன் சிலிண்டர் ஆக இருக்கும்.

IPL_Entry_Point