தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Finance Minister Ptr Palanivel Thiagarajan Accuses The Governor's House Over The Akshaya Pathra Scheme In The Tamil Nadu Legislative Assembly.

5 கோடி என்ன ஆனது? ஆளுநர் மாளிகை மீது பிடிஆர் பரபரப்பு குற்றச்சாட்டு

Kathiravan V HT Tamil
Mar 30, 2023 03:05 PM IST

1000 ரூபாய்க்கும் 500 ரூபாய்க்கும் மானிய கோரிக்கையில் விவாதம் வைத்து பணத்தை பெறக்கூடிய நிலையில், 5 கோடி ரூபாய் அரசு பணத்தை தனியார் நிறுவனத்திற்கு ஆளுநர் எப்படி வழங்கினார் என நிதியமைச்சர் கேள்வி

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

ட்ரெண்டிங் செய்திகள்

சட்டப்பேரவையில் இன்றைய தினம் நகராட்சி நிர்வாகம் தொடர்பான மானியக்கோரிக்கையில் பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி ’மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் அதிமுக ஆட்சியில் அட்சய பாத்திரம் என்ற திட்டமாக தொடங்கி வைக்கப்பட்டதாகவும், தற்போதைய அரசு அதன் பெயரை மாற்றி உள்ளதாகவும்’ குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கடந்த ஆட்சியில் அட்சய பாத்திரம் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

<p>தமிழ்நாடு ஆளுநர் மாளிகை (Twitter)</p>
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை (Twitter)

ஆளுநர் மாளிகைக்கு தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் கொடுக்கப்படக்கூடிய நிதியானது 50 லட்சம் ரூபாய் என்பதில் இருந்து திடீரென 2019ஆம் ஆண்டு 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டதாகவும், அந்த 5 கோடி ரூபாயில் 4 கோடி ரூபாய் தனிப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு நேரடியாக செலுத்தப்பட்டதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்காத அந்த அமைப்பு அரசு கொடுக்கும் பணத்தில் அரசு இடத்தில் நம்முடைய மாணவர்களுக்கு எப்படி சத்தில்லாத உணவை கொடுத்தார்கள் என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.

1.80 கோடி ரூபாயை அரசுக்கணக்கில் இருந்து எடுத்து வேறு கணக்கில் மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏதோ கட்சி நடத்துவதற்காக செலவு செய்யப்பட்டதா என்று தெரியவில்லை

1000 ரூபாய்க்கும் 500 ரூபாய்க்கும் மானியக்கோரிக்கையில் விவாதம் வைத்து பணத்தை பெறக்கூடிய நிலையில், 5 கோடி ரூபாய் அரசு பணத்தை எப்படி தனியார் நிறுவனத்திற்கு வழங்கினார்கள் என்றும் ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட பணம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டதுதானா என்று கேள்வி எழுப்பிய நிதியமைச்சர் அட்சய பாத்திரம் திட்டத்திற்கு 4 கோடி ரூபாய் நிதியை ஆளுநர் மாளிகை ஒதுக்கியது குறித்து ஆளுநர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் உரையை சுட்டிக்காட்டி பேரவையில் பேசிய அவைமுன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் ‘இதற்கு ஆளுநர் பதில் சொல்ல வேண்டும்’ என பேசினார்

IPL_Entry_Point