தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘சட்டப்பேரவையின் இறையாண்மை முக்கியம்; தீ பரவட்டும்’ -முதல்வர் ஸ்டாலின் ட்விட்!

‘சட்டப்பேரவையின் இறையாண்மை முக்கியம்; தீ பரவட்டும்’ -முதல்வர் ஸ்டாலின் ட்விட்!

Priyadarshini R HT Tamil
Apr 16, 2023 12:07 PM IST

CM MK Stalin : தமிழக முதல்வர் இன்று செய்துள்ள டிவீட்டில், தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை பாராட்டி எங்கள் முயற்சியில் தாங்களும் இணைந்து கொண்டதற்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு நன்றி. எந்தவொரு ஜனநாயகத்திலும் சட்டப்பேரவையின் இறையாண்மைதான் உச்சமானது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

காலனி ஆட்சியில் இருந்து நாம் சுதந்திரம் அடைந்தபோது, பிரிதல் குறித்த விஷயங்கள் எழுந்த போதிலும், நமது கூட்டாட்சி அரசியல் மற்றும் இந்திய அரசியல் அமைப்பில் தெளிவாக வகுக்கப்பட்டுள்ள மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் காரணமாக ஓர் ஒன்றிணைந்த தேசமாகவும் ஒருங்கிணைந்த சமூகமாகவும் உருவாகியுள்ளோம். எனினும், இந்தக் கோட்பாடுகள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவது வருத்தமளிக்கிறது. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் அம்மா நிலச் சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களை அல்லது டெல்லி அரசால் அனுப்பப்படும் கோப்புகளை எவ்வித ஒப்புதலும் அளிக்காமல் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவது மட்டுமல்ல, ஜனநாயகத்தின் உச்சமான மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 

டெல்லி சட்டமன்றத்தின் ஜனநாயக நடைமுறையில் துணை நிலை ஆளுநர் தொடர்ச்சியாகத் தலையிடுவது, தில்லியின் வரவு-செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்வதைத் தடுப்பது, அன்றாட நிர்வாக செயல்பாட்டை ஸ்தம்பிக்க செய்தல் போன்றவற்றால் டெல்லியில் நாங்கள் எதிர்கொள்ளும் நிலைமை மிகவும் மோசமானது. டெல்லி தேசியத் தலைநகர் ஆட்சிப் பகுதிச் சட்டத்தில், 2021ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தால் டெல்லி மாநில அரசு நிலைகுலைந்துள்ளது. மருத்துவம், கல்வி, நீர், மின்சாரம், தொழில்கள், நிதி அல்லது உள்கட்டமைப்பு என டெல்லி அரசு பெரும் முன்னேற்றம் அடைய முயலும் அனைத்துத் துறைகளிலும், துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகள் அதற்குத் தடையாக உள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசுகள் மற்றும் அவற்றின் ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் என்னும் இடைமுகம் ஒரு போர்க்களமாக ஆக்கப்பட்டு ஒன்றிய அரசால் சத்தமின்றி ஒரு போர் நிகழ்த்தப்பட்டு வரும் சூழ்நிலையில், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநர்கள்/துணைநிலை ஆளுநர்கள் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டு, அவற்றின் நிர்வாகத்தை தங்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப தடுக்கிறார்கள். அவர்கள் மத்திய மற்றும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் இடையே அதிகரித்து வரும் பிளவின் அடையாளமாக மாறிவிட்டனர். கூட்டாட்சிக் கூட்டுறவு எனும் கோட்பாட்டை மாநில அரசுகள் மிகவும் மதிக்கின்ற போதும்,  அதற்கு மத்திய அரசால் சொல்லளவிலேயே மதிப்பளிக்கபடுகிறது. இதனால் கெடுவாய்ப்பாக, ஆளுநர், துணைநிலை ஆளுநர் அலுவலகத்தின் பொறுப்பு பற்றிய கேள்விகளை மக்கள் எழுப்பும் நிலை உருவாகியுள்ளது என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தவொரு அரசியலமைப்புச் சட்டப் பதவி வகிப்பவரும் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று எண்ணக் கூடாது. இந்தியா சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. அது ஒன்றிய அரசு மற்றம் அதன் பிரதிநிதிகளின் ஆணையால் நிர்வகிக்கப்படவில்லை என்பதை நாம் உறுதியாக முன்னிலைப்படுத்த வேண்டிய தகுந்த நேரம் இதுவாகும் என்றும் தனது கடிதத்தில் டெல்லி முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய அதிகாரத்தை மையப்படுத்தும் போக்குகளுக்கு எதிராக உறுதியான தங்கள் நிலைப்பாட்டை எடுத்தியம்பும் வகையில், மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் சட்ட முன்வடிவுகளை ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்காக ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கக் கோரி, மத்திய அரசையும் இந்தியக் குடியரசுத் தலைவரையும் வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தைத் தாம் பாராட்டுவதாகவும், அதே வழியில், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் தங்களின் அரசியல் சாசனப் பணிகளை மேற்கொள்ள காலக்கெடுவை நிர்ணயம் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இதுபோன்றதொரு தீர்மானத்தை வரும் கூட்டத்தொடரில் டெல்லி சட்டமன்றத்தில் நான் தாக்கல் செய்வேன் என்றும் மாநில, தேசிய தலைநகரப் பகுதி அரசுகளை சிறுமைப்படுத்த நினைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நாம் கூட்டாக எதிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதுடன் தங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என்றும் குறிப்பிட்டு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் தமிழக முதல்வர் இன்று செய்துள்ள டிவீட்டில், தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை பாராட்டி எங்கள் முயற்சியில் தாங்களும் இணைந்து கொண்டதற்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு நன்றி. எந்தவொரு ஜனநாயகத்திலும் சட்டப்பேரவையின் இறையாண்மைதான் உச்சமானது. நியமனப்பதவியில் இருக்கும் ஆளுனர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் சட்டம் இயற்றும் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் சிறுமைப்படுத்தக்கூடாது. தீ பரவட்டும் என்று தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இரண்டாம் முறையாக நிறைவேற்றப்பட்டு அனுபப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழக ஆளுனர் ஒப்புதல் அளித்திருந்தார். இதற்கு முன்பே தமிழக அரசிற்கும் ஆளுநருக்கும் இடையே பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டு பரபரப்பு நிகழ்வுகள் ஏற்பட்டிருந்தன. தொடர்ந்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் வேண்டும் என ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திலும், தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 12ம் தேதி கடிதம் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்