தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Debate Between Aiadmk's C. Vijayabaskar And Water Resources Minister Duraimurugan Regarding The Cauvery-gundaru Linkage Project In The Tamil Nadu Legislative Assembly

ஐஸ் வைத்த விஜயபாஸ்கர்! கலாய்த்துவிட்ட துரைமுருகன்! பேரவையில் சிரிப்பலை!

Kathiravan V HT Tamil
Apr 01, 2023 11:54 AM IST

வாடிய பயிரை வாடும்போதெல்லாம் வாடிய வள்ளலார் போல் நீங்கள் நிதியை தந்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என துரைமுருகனுக்கு ஐஸ் வைத்து பேசினார் சி.விஜயபாஸ்கர்

அதிமுக எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
அதிமுக எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

ட்ரெண்டிங் செய்திகள்

இதில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை எம்.எல்.ஏவுமான சி.விஜயபாஸ்கர் பேசுகையில், நில எடுப்பு பணிகளுக்கு 554 கோடியும் கால்வாய் பணிகளுக்கு 111 கோடியும் 2023-24இல் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த விவரம் குறித்து நிதியமைச்சரின் பட்ஜெட்டிலோ மானியக் கோரிக்கையிலோ இடம்பெறவில்லை. ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட 700 கோடிக்குக்குள்ளானதா என்று அமைச்சரிடம் அறிய விரும்புகிறேன்.

காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் வரலாற்று சிறப்பு மிக்க திட்டம். காமராஜர் காலத்தில் இருந்து எல்லா முதல்வர்களும் நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணிய திட்டம்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

இந்த திட்டத்தை முதன்முதலாக 14 ஆயிரம் கோடிக்கு எஸ்டிமேட் செய்து, 6941 கோடியை நிர்வாக ஒப்புதல் வழங்கி 700 கோடியை பட்ஜெட்டில் வழங்கி 331 கோடியை இரண்டு வகையாக டெண்டர் விட்டு மிக சிறப்பாக விவசாயிகள் வாழ்த்துக்களோடு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த எடப்பாடியார் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்

அமைச்சரை அழைப்பது வாருங்கள் ஆறு வெட்டப்படுவதை பாருங்கள் தாராளமாக நிதியை தாருங்கள் என்று அமைச்சரை அழைக்கிறேன்.

இந்த திட்டத்தில் நில எடுப்பு பணிகள், கால்வாய் வெட்டும் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. இதனை விரைவுப்படுத்த வேண்டும்.

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மூத்த அமைச்சர், அவருக்கு நீர்வளத்தில் நீண்டகால அனுபவம் உண்டு, அவருக்கு நீரின் வாசனையும் தெரியும், மண்ணின் வாசனையும் தெரியும், விவசாயிகளின் கஷ்டத்தின் வாசனையும் தெரியும்

திட்டத்தை தொடங்கி வைத்து எப்படி எடப்பாடியார் வரலாற்றில் இடம்பெற்றாரோ அதுபோல் நிதியை தாராளமாக தந்து வரலாற்றில் நீர்வளத்துறை அமைச்சரின் பெருமையின் இடம்பெற வேண்டும்.

விரிந்த இதயத்தோடு நிதியை தாருங்கள் என 7 மாவட்ட விவசாயிகள் சார்பில் வலியுறுத்துகிறேன். வாடிய பயிரை வாடும்போதெல்லாம் வாடிய வள்ளலார் போல் நீங்கள் நிதியை தந்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் பதில்

கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நீண்டநாட்களுக்கு பிறகு விஜயபாஸ்கரின் வேகமான பேச்சை கேட்டேன். காரணம் அவர் அமைச்சராக இருந்தபோது நிச்சயம் இப்படி கேள்வி கேட்டிருப்பார்.

ஆனால் ரொம்ப கெட்டிகாரத்தனமா பேசுவார். என்னமோ இந்த திட்டத்தை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார்தான் கொண்டுவந்தது போலவும், வேற யாரும் அதை பற்றி சிந்திக்காதது போலவும் அட அட அடாடா!

நீங்கள் செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை; நீங்கள் மட்டும் செய்த மாதிரி சொன்னார்.

நியாயமாக இந்த திட்டம் தேசிய நீர் மேம்பாட்டு ஆணையம் மகாநதி-குண்டாறுவை இணைப்பது என்ற திட்டத்தை போட்டார்கள். பின்னர் இதனை இரண்டாக பிரித்து மகாநதி-கோதாவரி திட்டமாகவும் - காவிரி குண்டாறு திட்டமகவும் பிரித்தார்கள்.

’இது ஒரு நல்ல திட்டம் வரும்போது வரட்டும் ஆனால் நாம் காவிரி-குண்டாறை நாம் இணைப்போம்’ என கலைஞர் முதன்முதலாக மயானூரில் 165 கோடி ரூபாயை ஒதுக்கினார். குண்டாறில் தண்ணீர் செல்ல கட்டியவன் கதவனை கட்டியவன் அடியேன் துரைமுருகன்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி

9-5-2008-இல் கலைஞர் ஆணையிட்டார். அதன் பிறகு நீங்கள் வந்தீர்கள். நீங்களும் சரி; நாங்களும் சரி எது எப்படி இருந்தாலும் காவிரி குண்டாறை இணைப்பதுதான் சரி என்பதால் திட்டம் போட்டோம்.

இதற்கு கால்வாய் வெட்ட நிலம் எடுக்க வேண்டும் என்பதால் 2020ஆம் ஆண்டில் 600 கோடியை நில எடுப்புக்காக கொடுத்தீர்கள். அதில் 34.31 கோடிதான் செலவானது; மீதி பணத்தை அரசு எடுத்துக் கொண்டீர்கள். 71.60 ஏக்கர் நிலங்கள்தான் கையகப்படுத்தப்பட்டது. இதோடு உங்கள் வேலை முடிந்தது.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் - கோப்புப்படம்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் - கோப்புப்படம்

2021-22, 2022-23ஆண்டுகளில் 311 கோடி ரூபாய் நாங்கள் ஒதுக்கி 698.97 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. தளபதி உத்தரவின் மீதி பணத்தை டெப்பாசிட் வைத்து எப்போது தேவையோ அப்பொதெல்லாம் நிலத்தை எடுங்கள் என உத்தரவிட்டோம்.

2023-24ஆம் ஆண்டில் நில எடுப்பு பணிக்காக 554.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. அடுத்து கால்வாய் வெட்டுவதற்காக 2021ஆண்டில் நீங்கள் ஒன்றும் செலவு செய்யவில்லை. 2021-22ஆம் ஆண்டில் 177.9 கோடி ரூபாயை கால்வாய் வெட்டும் பணிக்காக செலவு செய்துள்ளோம்.

64 சதவீத கால்வாய் வெட்டும் பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ளது. 2023-24ஆம் ஆண்டில் 111.5 கோடி ஒதுக்கப்பட்டு கால்வாய் வெட்டும்பணி வேகமாக நடந்து வருகிறது.

எனவே விஜயபாஸ்கருக்கு சொல்கிறேன்’ நிச்சயமாக தளபதி ஆட்சியில் காவிரி-குண்டாறு இணைப்பு நடந்தே தீரும் என துரைமுருகன் பேசினார்.

IPL_Entry_Point