தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admkvsbjp: ‘இபிஎஸ் வார்த்தை பைபிள் இல்ல.. Nda டச்சில் தான் இருக்காங்க’ பாஜக ஸ்ரீனிவாசன் பேட்டி!

ADMKvsBJP: ‘இபிஎஸ் வார்த்தை பைபிள் இல்ல.. NDA டச்சில் தான் இருக்காங்க’ பாஜக ஸ்ரீனிவாசன் பேட்டி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Oct 04, 2023 10:51 AM IST

NDA Alliance: ‘ஜெயலலிதா காலத்தில் பாஜக சின்ன கட்சி தான். அப்போது, எங்களை தூக்கி சுமந்திருக்கலாம். இன்று எங்களை யாரும் தூக்கி சுமந்து போகும் இடத்தில் நாங்கள் இல்லை. கை பிடித்து நடந்து போகும் இடத்தில் சமமாக இருக்கோம். தேர்தல் முடிவு வரட்டும் பாருங்க’

அதிமுக கூட்டணி முறிவு குறித்து பாஜக மாநில செயலாளர்  ஸ்ரீனிவாசன் பரபரப்பு பேட்டி
அதிமுக கூட்டணி முறிவு குறித்து பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் பரபரப்பு பேட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

‘‘அண்ணாமலை எங்கே கோபப்படுகிறார். அவர் பதட்டமாக இல்லை. அவரை பதட்டமாக பார்க்கிறார்கள். சுறுசுறுப்பை பரபரப்பு என்று புரிந்து கொள்கிறீர்கள். பதட்டப்பட்டு என்ன தவறான முடிவை எடுத்திருக்கிறார்? பதறிய காரியம் சிதறும், பதறாத காரியம் சிதறாது என்பார்கள். தவறான முடிவு எடுத்தால் தான் பதட்டம் என்று அர்த்தம். அவர் அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை. 

முடிவு எடுக்க வேண்டியது தேசிய தலைமை தான். அதை அவரே கூறியிருக்கிறார். திரும்ப திரும்ப ஊடகங்களில் சொல்லியிருக்கிறார். கூட்டணி பற்றியோ, முக்கியமான விசயங்கள் பற்றியோ தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என்று. அதில் என்ன பதட்டம் இருக்கிறது? தேசிய தலைமை என்ன சொல்கிறதோ அதை கேட்டுக் கொள்ளப் போகிறோம் அவ்வளவு தான். 

அதிமுக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம் என்பது ஊடகங்கள் சித்தரிக்கும் விசயம். அதிமுக அதை சொல்லியிருக்கலாம். அண்ணாமைலயை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க, நாங்கள் எங்கேயும் வலியுறுத்தவில்லை என்று அதிமுகவே கூறிவிட்டது. நாங்கள் அவரை இலக்காக வைத்து மேலே பேசவில்லை என்றும் கூறிவிட்டார்கள். 

தமிழ்நாட்டில் எப்போதும் ஒரு ஊக அரசியல் நடந்து கொண்டிருக்கும். நடப்பது ஒன்றாகவும், ஊகித்துக் கொள்வது ஒன்றாக இருக்கும். அப்படி தான் இந்த விசயத்தையும் ஊகித்து கொள்கிறார்கள். ஆளாளுக்கு ஒரு ஊகத்தை இந்த விசயத்தில் கிளப்புகிறார்கள். உண்மை என்று ஒன்று இருக்கும். அது தான் கடைசியில் ஜெயிக்கும். 

அதிமுக கூட்டணி வெளியேற்றம் குறித்து, யாரும் கருத்து சொல்லாதீங்க, காத்திருங்கள் என்று தலைமை கூறியிருக்கிறது. அதிமுகவிலும் அதே தான் சொல்லியிருக்கிறார்கள். தொண்டர்கள் முடிவை எதிரொலித்திருக்கிறோம் என்று இபிஎஸ் கூறியிருக்கிறார்.

இது ஒன்றும் பைபிள் கிடையாது. புனித நூல்களில் கடவுளின் வாக்கியம் தான் இறுதியானது. இபிஎஸ் வார்த்தையும் மனிதரின் வார்த்தை தான். பாஜகவில் வந்த வார்த்தைகளும் மனிதர்களின் வார்த்தைகள் தானே . என்டிஏ உருவாக்கப்பட்டது, பாஜக அழைப்பின் பேரில் தான் அதிமுக உள்ளே வந்தது. 

1997 ல் அத்வானி, வாஜ்பாய் கோலோச்சிய காலத்தில் உருவாக்கப்பட்டது என்டிஏ. காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஒரு கூட்டணிக்கு அழைப்பு விடுத்த போது, முதலில் அதற்கு மரியாதை கொடுத்து இணைந்தவர் ஜெயலலிதா தான். இன்றும் அதிமுக என்டிஏ உடன் டச்சில் தான் இருக்கிறது. இறுதி முடிவு என்ன என்பதை எங்கள் கட்சி தலைமை சொல்லும். அதை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்வோம். 

என்டிஏ.,வில் திமுக இருந்ததா இல்லையா? அதிமுக இருந்ததா இல்லையா? வைகோ என்டிஏ.,வில் இருந்தாரா இல்லையா? அப்புறம் என்ன, பெரிய கட்சி இல்லை என்கிற கேள்வி. தமிழகத்தில் காங்கிரஸ் தவிர, அனைத்து கட்சியும் என்டிஏ.,வில் இருந்துள்ளார்கள்.  

ஜெயலலிதா காலத்தில் பாஜக சின்ன கட்சி தான். அப்போது, எங்களை தூக்கி சுமந்திருக்கலாம். இன்று எங்களை யாரும் தூக்கி சுமந்து போகும் இடத்தில் நாங்கள் இல்லை. கை பிடித்து நடந்து போகும் இடத்தில் சமமாக இருக்கோம். தேர்தல் முடிவு வரட்டும் பாருங்க. 

எங்களிடம் இருந்து பிரிந்து வந்த பின் அதிமுக சுதந்திரமாக செயல்படுவதாக கூறுகிறார்கள் என்றால், அதனால் என்ன?  பட்டாசு வெடித்து கொண்டாடட்டும். எங்கள் முடிவு ஒன்று தான், அதிமுக உள்ளே இருக்கா, வெளியே போயிருக்கா என்பது தெரியாது. மாநில தலைமை இதுவரை அது பற்றி அறிவிக்கவில்லை.

நாங்கள், தேசிய தலைமையின் வழிகாட்டுதலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அவர்கள் சற்று பொறுக்க சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதை ஏற்போம். கூட்டணியை உருவாக்கும் அதிகாரம், என்டிஏ.,வை பொருத்தவரை மாநில கட்சிக்கு கிடையாது. தேசிய கட்சி தான் உருவாக்கும். 

அதிமுக வெளியேறியதாக அறிவித்ததால் ஏற்பட்ட புதிய அரசியன் முன்னேற்றம் தான், அண்ணாமலை டில்லி சென்றதற்கான காரணம். மேலிடத்திற்கு விளக்குவதற்காக போயிருக்கிறார். இது இயற்கை தானே. தேசிய தலைவர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சரை சந்தித்திருக்கிறார். எல்லாரையும் பார்க்கிறார் அவ்வளவு தான்,’’

என்று அந்த பேட்டியில் ஸ்ரீனிவாசன் கூறியிருக்கிறார். 

IPL_Entry_Point