Thiruma Annamalai Meet: 'அண்ணாமலை கையை இறுகப்பற்றிய திருமா!’ திடீர் சந்திப்பில் நடந்தது என்ன?
“அரசியலில் இருவேறு துருவங்களாக இருந்து வரும் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்ட சம்பவம் அரசியல் களத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது”
அரசியலில் இருதுருவங்களாக இருந்து உள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிக் கொள்ளும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பாஜகவை பேசும் மேடை தோறும் கடுமையாக விமர்சித்து வருவதுடன், பாஜக இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்காது என அறிவித்தார்.
திமுக கூட்டணியில்தான் விடுதலை சிறுத்தைகள் தேர்தலை சந்திக்கும் என அறிவித்தது மட்டுமின்றி அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் மறைந்த பங்காரு அடிகளாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் சென்றனர். பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி அம்மாள், மகன்களுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு புறப்படவிருந்த நிலையில், அங்கு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் பங்காரு அடிகளார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்தனர்.
அப்போது திருமாவளவனை பாஜகவின் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
“இப்போதுதான் வந்தீர்களா...! வாங்க! உங்களை ரொம்ப நாளா பாக்கணும்னு நனைச்சிட்டு இருந்தேன்” என அண்ணாமலையின் கையை இறுகப்பற்றி நலம் விசாரித்த திருமாவளவன் நடைபயணம் குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது, விசிக எம்.பி. ரவிக்குமாரின் புத்தகத்தையும், உங்களின் பேச்சையும் கேட்பதாக அண்ணாமலை அப்போது கூறினார்.
அரசியலில் இருவேறு துருவங்களாக இருந்து வரும் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்ட சம்பவம் அரசியல் களத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.