தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  3 Killed In Roof Collapse Of Private Pub In Alwarpet Chennai

Chennai : சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு!

Divya Sekar HT Tamil
Mar 29, 2024 06:46 AM IST

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் மதுபான விடுதி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பலியாகியுள்ளனர். மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் மிக அருகில் நடைபெற்ற வரும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதால் மெட்ரோ தான் காரணமா என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு
கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து விசாரணை நடத்த வந்த சென்னை மாநகர காவல்துறை இணை ஆணையர் தர்மராஜ், மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிர் இழந்துள்ளதாகவும்,அவர்களின் உடல் மீட்க்கப்பட்டு இராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார். இறந்தவர்களில் ஒருவர் தமிழகத்தின் திருச்சியையும் ,இருவர் மணிப்பூரை சேர்ந்தவர்கள் என்றும் 3 பேரும் தனியார் மதுபான விடுதியில் வேலை செய்தவர்கள் என தெரிவித்தார். 

கட்டிட மேற்கூரை ஏன் விழுந்தது என்பது குறித்து அதற்கான நிபுணர்கள் தான் தெரிவிக்க முடியும் என கூறினார். கட்டிடத்தின் இடிபாடுகளில் வேறு யாரும் சிக்கவில்லை அனைவரையும் பாதுகாப்புடன் வெளியேற்றிவிட்டதாக தெரிவித்தார்.விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்

விபத்து நடந்த மதுபான விடுதியில் ஐபிஎல் போட்டிக்காக பல்வேறு சலுகைகளுடன் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஐபிஎல் போட்டியை காண இருக்கைகளை முன்பதிவு செய்து இருந்தனர் , போட்டிக்கு முன்னதாகவே சரியாக மாலை 7.15 மணியளவில் விபத்து நடைபெற்ற நிலையில் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது .

விபத்து குறித்து அபிராமிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இதனிடையே விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் விபத்து குறித்து முதற்கட்ட விசாரணை நடைபெற்ற வருவதாகவும் சம்பந்தப்பட்ட மதுபான விடுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து முதற்கட்ட விசாரணை நடைபெற்ற வருவதாகவும் தற்போதைய நிலையில் கட்டிடத்தின் மேற்கூரை என்பது கான்கிரீட் கலவியால் போடப்படவில்லை என்பது தெரிய வந்திருப்பதாகவும் , அருகில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மெட்ரோ ரயில் பணிகள் தான் விபத்திற்கான காரணமா என்பது குறித்தும் உடனடியாக கூறமுடியாது என தெரிவித்த அவர் சம்பந்தப்பட்ட மதுபான விடுதி உரிய அங்கீகாரம் பெற்று இயங்கி வருவதாகவும் மதுபான விடுதி உரிமையாளரை அனைத்து விசாரணை நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார் .

மேலும் உயிரிழந்த மூவரில் ஒருவர் திருச்சி சேர்ந்தவர் என்பதால் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் மணிப்பூவை சேர்ந்த மற்ற இருவர் குறித்து தகவல் சேகரித்து அவர்களது உறவினர்களுக்கும் தெரியப்படுத்தப்படும் என குறிப்பிட்டார் .

சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் மதுபான விடுதி விபத்து மெட்ரோ ரயில் பணிகள் காரணமல்ல என மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் விபத்து நடந்த இடத்திற்கு 240 அடி தொலைவில் பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த பகுதி , சுற்றியுள்ள இடங்களில் எந்தவித அதிர்வும் கண்டறியப்படவில்லை. அதேசமயம் மதுபான விடுதி மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள்  நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், மீட்பு பணிகளில் துரிதமாக ஈடுபட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்