'பார்லிமென்ட் பாதுகாப்பு மீறலுக்கு காரணம் வேலைவாய்ப்பின்மை தான்': ராகுல் காந்தியின் விமர்சனமும் பாஜகவின் எதிர்வினையும்!
பார்லிமென்டில் நடந்த பாதுகாப்பு மீறல் தொடர்பாக, பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசைக் கடுமையாக சாடினார். அப்போது, வேலையின்மை மற்றும் பணவீக்கம் தான், இப்பிரச்னைக்குக் காரணம் என்று குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் தொடர்பாக ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ''மக்களவையில் பாதுகாப்பு மீறல் நடந்தது. பிரதமர் மோடியின் கொள்கைகளால் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் தான், அதிகரித்ததே இதற்குக் காரணம்" என்று அவர் கூறினார்.
மேலும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, “வேலைகள் எங்கே? இளைஞர்கள் விரக்தியில் உள்ளனர். இந்த பிரச்னையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். நிச்சயமாக பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், அதற்குப் பின்னால் உள்ள காரணம் நாட்டின் மிகப்பெரிய பிரச்னை - வேலையின்மை’’என்று தெரிவித்துள்ளார்.
இதனை பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா விமர்சித்துக் கூறியதாவது, “ராகுல் காந்தி ஒருபோதும் ஏமாற்றமடையமாட்டார். எப்போதும் குப்பையாக பேசுகிறார். சாதனைக்காக, இந்தியாவில் வேலையின்மை 3.2%ஆகத்தான் உள்ளது. இது ஆறு ஆண்டுகளில் இல்லாதது.
ஆனால், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிபிஐ(எம்) ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பை ராகுல் காந்தி மற்றும் இந்திய கூட்டணி தலைவர்கள் விளக்க வேண்டும். குறிப்பாக, பாரத் ஜோடோ யாத்ராவின் ஒரு பகுதியாக இருந்த அசிம் சரோட் உடனான தனது தொடர்பை ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும். மேலும் ஊடுருவும் நபர்களுக்கு சட்ட உதவியை வழங்க முன்வந்துள்ளார்,” என்று மாளவியா மேலும் கூறினார்.
முன்னதாக, காங்கிரஸ் தேசிய செயலர் கே.சி.வேணுகோபால், இந்தச் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என்று முத்திரை குத்தினார். மேலும் இந்தச் சம்பவத்தை அரசியலாக்கியது எதிர்க்கட்சிகள் அல்ல என்றும்; டெல்லி காவல்துறைதான் என்றும் கூறினார்.
டெல்லியில் ஏஐசிசி தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் புகார் அளித்த டெல்லி காவல்துறை, டிசம்பர் 13 அன்று நடந்த பாதுகாப்பு மீறலை பயங்கரவாத தாக்குதல் என்று அழைத்தது என்றார்.
மேலும் என்ன காரணங்களுக்காக 14 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையில், இந்தச் சம்பவம் மிகவும் "தீவிரமான" பாதுகாப்பு குறைபாடு என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி கோரினார்.
இதுகுறித்து கனிமொழி எம்.பி. கூறுகையில், "இரண்டு பேர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட பாதுகாப்பாக இல்லை என்பதையும், நமது ஜனநாயகக் கோயில் எந்த நாளும் தாக்கப்படலாம் என்பதையும் இந்த சம்பவம் காட்டுகிறது. இந்த சம்பவம் ஒரு அப்பட்டமான பாதுகாப்புக் குறைபாட்டைக் குறிக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புகை கேன்களுக்கு பதிலாக துப்பாக்கிகளையோ அல்லது வெடிபொருட்களையோ எடுத்துச் சென்றிருக்கலாம். புதிய நாடாளுமன்றத்தின் கட்டடத்தின் பாதுகாப்பை யார் வேண்டுமானாலும் மீறலாம். உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு போதுமானதாக இல்லை’’ என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
