PM Narendra Modi: கடலுக்கடியில் பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி - வீடியோ
குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, கடலுக்கு அடியில் மூழ்கியதாக கருதப்படும் துவாரகா நகருக்கு சென்று பார்வையிட்டு வழிபாடு நடத்தினார்.

குஜராத் மாநிலத்திற்கு இன்று (பிப்.25) பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி புகழ்பெற்ற துவாரகாதீஷர் கோயிலுக்கு வழிபாடு செய்வதற்காக சென்றார். அவரை வரவேற்ற கோயில் பூசாரிகள் பிரதமருக்கு கிருஷ்ணர் சிலை பரிசாக அளித்தனர். பின்னர் துவாரகாதீஷர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
பகவான் கிருஷ்ணர் பூலோகத்தில் இருந்து புறப்பட்டபோது அவர் ஆட்சி செய்த துவாரகா மாநகரம் கடலுக்கு அடியில் மூழ்கடிக்கப்பட்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. குஜராத்தில் கோமதி நதி மற்றும் அரபிக்கடலின் முனையில் அமைந்துள்ளது துவாரகாதீஷர் கோயில். துவாரகாதீஷ் அல்லது துவாரகையின் அரசர் என்று அழைக்கப்படும் கடவுள் கிருஷ்ணர் கோயிலின் பிரதான தெய்வம்.
இந்த நிலையில், புராணங்களில் கிருஷ்ணரின் துவாரகா நகரம் மூழ்கிய இடமாக கருதப்படும் இடத்தில் ஆழ்கடல் பயணம் மேற்கொண்டு, பிரதமர் மோடி பிரார்த்தனை செய்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் தண்ணீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தது மிகுந்த தெய்வீக அனுபவமாக இருந்தது. ஆன்மீக மகத்துவம் நிறைந்த பண்டைய காலத்துடன் நான் தொடர்பில் இருப்பது போல உணர்ந்தேன்." என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, குஜராத்தின் ஓகா மற்றும் பெய்ட் துவாரகா தீவை இணைக்கும் சுதர்ஷன் சேது பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ரூ.979 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலமானது துவாரகாதீஷர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2.32 கி.மீ நீளமுள்ள இப்பாலம் நாட்டின் மிக நீளமான கேபிள் தாங்கு பாலமாக அமைந்துள்ளது. ‘சிக்னேச்சர் பாலம்’ என்றும் இது அழைக்கப்படுகிறது. இந்த நான்கு வழிச்சாலை பாலம் 27.20 மீட்டர் அகலமும், பாலத்தின் இரண்டு பக்கமும் 2.50 மீட்டர் அகல நடைப்பாதையும் கொண்டுள்ளது.
இந்தப் பாலத்தை திறந்தது வைத்தது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், "நிலங்களையும் மக்களையும் இணைக்கும் பாலமான சுதர்சன் சேதுவை இன்று திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான நமது உறுதிப்பாட்டின் சான்றாக இது துடிப்புடன் நிற்கிறது." என்று தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்