Manipur: மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்க ஒப்புதல்!
மணிப்பூர் கலவரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்க அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
மணிப்பூர் கலவரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் ஆசிட் வீச்சால் முகம் சிதைந்தவர்களுக்கு ரூ.8 லட்சம் வரையிலும் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மே மாதம் 3ம் தேதி முதல் வன்முறை தொடர்ந்து வருகிறது. அங்கு குக்கி மற்றும் மொய்தே இன மக்கள் இடையே நிலவி வரும் கடும் மோதலே மணிப்பூர் பற்றி எரியக் காரணமாக இருக்கிறது. அங்குப் பெரும்பான்மையாக இருக்கும் மைத்தேயி இன மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக அவர்கள் போராட்டத்தையும் நடத்தினர். இருப்பினும் மைத்தேயி மக்களைப் பழங்குடியினர் பிரிவில் சேர்த்தால் தங்களுக்கான உரிமை பாதிக்கப்படும் என்று குக்கி மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாகவே அங்கு இரு தரப்பிற்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது.
சமீபத்தில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை மொய்தே இன கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இப்படி ஒட்டு மொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்த மணிப்பூர் நிலவரம் இன்று வரை ஓய்ந்த பாடு இல்லை. இதற்கிடையில் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கலவரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் ஆசிட் வீச்சால் முகம் சிதைந்தவர்களுக்கு ரூ.8 லட்சம் வரையிலும் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மணிப்பூர் வன்முறையில் 175 பேர் உயிரழந்துள்ளனர்.மேலும் 1108 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் 32 பேர் காணாமல் போனதாக காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்