தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  எப்பேர்ப்பட்ட சளியாக இருந்தாலும் விரட்டியடிக்கும் தூதுவளை ரசம்

எப்பேர்ப்பட்ட சளியாக இருந்தாலும் விரட்டியடிக்கும் தூதுவளை ரசம்

I Jayachandran HT Tamil
Mar 01, 2023 10:46 PM IST

எப்பேர்ப்பட்ட சளியாக இருந்தாலும் விரட்டியடிக்கும் தூதுவளை ரசம் செய்முறை குறித்து இங்கு பார்க்கலாம்.

தூதுவளை ரசம்
தூதுவளை ரசம்

ட்ரெண்டிங் செய்திகள்

மழைக்காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடல் சோர்வு மற்றும் எளிதில் சளி பிடிக்க ஆரம்பித்துவிடும். இந்த சளி பிரச்னையை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால் காய்ச்சல் வரை கொண்டு சென்று விடும்.

மழைக்காலம் என்று மட்டுமில்லை. கோடைக்காலத்திலும் தலையில் வியர்வை நிறைந்து சளிப்பிடிக்கலாம். எனவே வீட்டு வைத்தியம் செய்து சுலபமாக இந்த சளி பிரச்னையை உடலில் இருந்து முழுவதுமாக நீக்கிவிட முடியும். அதற்கு நமக்கு தேவையான முக்கிய பொருள் என்னவென்றால் தூதுவளை.

இந்த தூதுவளையைப் பயன்படுத்தி சட்னி செய்தோ அல்லது ரசம் வைத்தோ சாப்பிட்டோம் என்றால் உடலில் இருக்கும் அனைத்து சளியையும் வெளிக்கொண்டு வந்துவிடும். அவ்வாறு தூதுவளை வைத்து செய்யக்கூடிய சுவையான ரசத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தூதுவளை ரசம் செய்யத் தேவையான பொருட்கள்:

தூதுவளை – 2 கைப்பிடி,

சின்ன வெங்காயம் – 10,

தக்காளி – 2,

பச்சை மிளகாய் – 3,

காய்ந்த மிளகாய் – 2,

பூண்டு – 15 பல்,

மிளகு – ஒரு ஸ்பூன்,

சீரகம் – ஒரு ஸ்பூன்,

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்,

புளி – எலுமிச்சை அளவு,

உப்பு – ஒரு ஸ்பூன்,

எண்ணெய் – 3 ஸ்பூன்,

கடுகு – அரை ஸ்பூன்,

உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன்,

கருவேப்பிலை – ஒரு கொத்து,

கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

தூதுவளை ரசம் செய்முறை:

முதலில் எலுமிச்சம்பழ அளவு புளியை தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, நன்றாகக் கரைத்து, புளித்தண்ணீர் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு சின்ன வெங்காயம் மற்றும் 15 பல் பூண்டை தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.

அதன் பின்னர் இரண்டு கைப்பிடி தூதுவளையை தனியாக கில்லி கொண்டு, தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், 15 பல் பூண்டு, 3 பச்சை மிளகாய் மற்றும் 2 கைப்பிடி தூதுவளையை சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் 2 காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு தாளிக்க வேண்டும்.

அதன்பிறகு சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து லேசாக வதக்கி விட்டு, அரைத்து வைத்துள்ள தூதுவளை விழுதை இவற்றுடன் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

இவை அனைத்தும் நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்த்து அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.

சிறிது நேரம் தட்டை போட்டு மூடி நன்றாகக் கொதிக்க விடவேண்டும்.

ரசம் கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு கொத்து கொத்தமல்லி தழையை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

இந்தத் தூதுவளை ரசத்தை சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். அல்லது தனியாகவும் குடிக்கலாம்.

இவ்வாறு செய்து சாப்பிடுவதன் மூலம் உடம்பில் இருக்கும் சளி பிரச்னையை முழுவதுமாக அகற்ற முடியும்.

WhatsApp channel

டாபிக்ஸ்