தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Amman Kovil Kizhakale : முதலில் ரஜினி.. அடுத்து முரளி..பின்னர் தான் விஜயகாந்த்.. 38 ஆம் ஆண்டில் அம்மன் கோவில் கிழக்காலே

Amman Kovil Kizhakale : முதலில் ரஜினி.. அடுத்து முரளி..பின்னர் தான் விஜயகாந்த்.. 38 ஆம் ஆண்டில் அம்மன் கோவில் கிழக்காலே

Divya Sekar HT Tamil
Apr 24, 2024 06:00 AM IST

38 Years of Amman Kovil Kizhakale : இந்த படத்தில் சின்னமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்த விஜயகாந்த் ஒரு கிராமத்தில் எளிய பாட்டுக்காரன் ஆக நடித்திருப்பார். அதேபோல கண்மணி ஆக நடித்த நாயகி ராதா பணக்கார திமிர் பிடித்த பெண்ணாக நடித்திருப்பார்.

அம்மன் கோவில் கிழக்காலே
அம்மன் கோவில் கிழக்காலே

ட்ரெண்டிங் செய்திகள்

இப்படத்தில் ரவிச்சந்திரன், ஸ்ரீவித்யா, செந்தில், ராதாரவி, வினு சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், இசைஞானி இசை அமைத்திருப்பார். இப்படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் இடம் பெற்றிருக்கும். எட்டு பாடல்களுமே டாப் ஹிட் என்றே சொல்லலாம்.

இப்படத்தில் விஜயகாந்தின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தில் விஜயகாந்த் நடித்ததற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். இந்தப் படத்தில் விஜயகாந்த் சின்னமணியாக நடித்திருப்பார். ராதா கண்மணி ஆக நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்தை மக்கள் யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரம் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தில் சின்னமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்த விஜயகாந்த் ஒரு கிராமத்தில் எளிய பாட்டுக்காரன் ஆக நடித்திருப்பார். அதேபோல கண்மணி ஆக நடித்த நாயகி ராதா பணக்கார திமிர் பிடித்த பெண்ணாக நடித்திருப்பார்.

இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு அது காதலாக மாறுவது தான் கதை. கிராமத்து திருவிழாவில் பாடும் சின்னமணியாக நடித்த விஜயகாந்த்கும்,கண்மணியாக நடித்த ராதாவுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதில் ஆத்திரமடையும் சின்னமணி ஊர் காரர்கள் மத்தியில் கண்மணிக்கு கோபத்தில் தாலி கட்டி விடுவார்.

பின்னர் சின்னமணி பற்றி கண்மணிக்கு தாய் எடுத்துக் கூறியதை எடுத்து மனம் திருந்தி சின்னமணியை காதலிக்க ஆரம்பிப்பார் கண்மணி. இதில் சின்னமணியை கொலை செய்ய வரும் நபர்களை கண்மணி கொன்று விடுகிறார். கொலை செய்ததற்காக கண்மணி சிறைக்குச் செல்வாள். இதனால் அவள் நினைவில் சின்னமணி மனநலம் பாதிக்கப்படுவான். இதுதான் இப்படத்தின் கதை.

வழக்கமான பாணியில் மோதலில் ஆரம்பித்து காதலில் முடிந்தாலும் இந்த கதையை நகைச்சுவை சென்டிமென்ட் கலந்து ஆர் சுந்தர்ராஜன் இயக்கிய விதம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

அதேபோல இப்படத்தின் வெற்றிக்கு இசையும் முக்கிய பங்கு. இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருப்பார். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் செம ஹிட் என்று சொல்லலாம். இப்படத்தில் அனைத்து பாடல்களையும் கங்கை அமரன் எழுதியிருப்பார்.

இப்படத்தில் ராதாவை வம்பு இழுக்கும் விஜயகாந்த் ’சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே’ என பாடும் பாடல், அதனைத் தொடர்ந்து மீண்டும் ராதாவை வம்பிழுக்கும் விதமாக பாடிய ’நம்ம கடைவீதி கலகலக்கும் என் அக்கா மக அவன் நடந்து வந்தா’ இந்த பாடலும் செம ஹிட் பாடல்.

அதேபோல இந்த பாடலை யாராலும் மறக்க முடியாது இன்றளவும் அனைவரது whatsapp ஸ்டேட்டஸ்சிலும் இந்த பாடல் நாம் தொடர்ந்து கேட்கும் பாடலாக உள்ளது. அதுதான் ’பூவை எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேன் ஏன் சின்ன ராசா’ இந்த பாடல்.

வாழ்க்கையை வெறுத்து சந்தர்ப்பத்தால் ராதாவுடன் ஆன திருமணத்தை பிடிக்காமல் விரக்தியில் விஜயகாந்த் பாடும் பாடலாக ’ஒரு மூணு முடிச்சாலே முட்டாளே ஆனேன் கேளு கேளு தம்பி’ என்ற பாடல் இடம் பெற்றிருக்கும் இந்த பாடலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற பாடல்.

இப்படத்தின் இயக்குனர் சுந்தர்ராஜன் இதற்கு முன்பாக விஜயகாந்தை வைத்து வைதேகி காத்திருந்தாள் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படமும் செம ஹிட். இதனை எடுத்து அவர் சுகமான ராகங்கள், குங்குமச்சிமிழ் ஆகிய படங்களை இயக்கினார். அதன் பிறகு தான் அவர் அம்மன் கோவில் கிழக்காலே என்ற படத்தின் கதையை எழுதினார். ஆனால் இந்த கதையை எழுதும்போது இயக்குனர் மனதில் ரஜினியை சின்ன மணியாக நினைத்து தான் எழுதியுள்ளார்.

 அதேபோல கண்மணிகளாக ராதாவை முடிவு செய்து எழுதியுள்ளார். கதை எல்லாம் எழுதி முடித்துவிட்டு ரஜினியை சந்திக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை.

அதன் பின்னர் இந்த படத்தை முரளி வைத்து நடிக்க வைக்கலாம் என முடிவு செய்தார். அந்த டைம் முரளி நடித்த பூவிலங்கு என்ற திரைப்படம் ஹிட் ஆன நிலையில் முரளியையும் ரேவதியையும் வைத்து இந்த படத்தை எடுக்கலாம் என இயக்குனர் சுந்தர்ராஜன் முடிவு செய்துள்ளார்.

பின்னர் முரளியை அணுகிய போது அவர் கன்னட படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால். அதனை முடித்துவிட்டு இந்த படத்திற்கு கால்சீட் தருவதாக கூறியுள்ளார். இதனால் சுந்தர்ராஜன் அடுத்ததாக விஜயகாந்த் வைத்து இந்த படத்தை எடுக்க முடிவு செய்தார் .அப்படித்தான் விஜயகாந்த் இந்த படத்தில் கமிட்டானார். இப்படம் வெளியாகி இன்றுடன் 38 வருடங்கள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்