தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Gemini Ganesan: தமிழ் சினிமாவின் காதல் மன்னன்..வரலாற்று குறியீடாய் நினைவில் வாழும் ஜெமினி கணேசன்

Gemini Ganesan: தமிழ் சினிமாவின் காதல் மன்னன்..வரலாற்று குறியீடாய் நினைவில் வாழும் ஜெமினி கணேசன்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 22, 2024 06:45 AM IST

Gemini Ganesan death anniversary: கலைத் துறையில் ஜெமினி கணேசன் சாதனை படைத்ததற்காக 1971இல் இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

ஜெமினி கணேசன் நினைவு நாள்
ஜெமினி கணேசன் நினைவு நாள்

ட்ரெண்டிங் செய்திகள்

இவரது முதல் படம் மிஸ் மாலினி. இந்தப் படத்தில் மிகச் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். மனம்போல் மாங்கல்யம் படம்தான் கதாநாயகனாக இவர் அறிமுகமான முதல் படம் ஆகும்.

பாசமலர், பார்த்திபன் கனவு, காத்திருந்த கண்கள், சாந்தி நிலையம், காவியத் தலைவி, நான் அவன் இல்லை என பல திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்தார்.

ரொமான்ஸ் படங்களில் அதிகம் நடித்ததால் காதல் மன்னன் எனவும் அன்புடன் அழைக்கப்பட்டார்.

எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் தனிப்பாதையில் பயணிக்க ஜெமினி கணேசன் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கிக் கொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார்.

நடிகர்களாக கொடிகட்டி பறந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகியோருடனும் இவர் இணைந்து நடித்துள்ளார்.

விருதுகள்

 

கலைத் துறையில் இவர் சாதனை படைத்ததற்காக 1971இல் இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

கலைமாமணி, எம்ஜிஆர் கோல்டு மெடல், ஸ்கிரீன் லைஃப்டைம் அவார்டு ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

அந்தக் காலகட்டத்தில் நடிப்புத் துறைக்கு வந்தவர்களில் பட்டப்படிப்புப் படித்தவர்களில் வெகு சிலரே இருந்தனர். அவர்களில் ஒருவர் ஜெமினி கணேசன்.

எம்ஜிஆர் அரசியலில் ஜொலித்தார். சிவாஜி கணேசனும் அரசியல் களமிறங்கி தோல்வி அடைந்தார்.

ஆனால், ஜெமினி கணேசன் அரசியல் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. 50 ஆண்டு காலம் திரைத்துறையில் கோலோச்சிய ஜெமினி கணேசன் தனது கெரியரில் 200-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.

கமல்ஹாசனின் அவ்வை சண்முகி, கார்த்திக்குடன் மேட்டுக்குடி ஆகிய படங்களில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. ஜெமினி கணேசன் நடிகராக முத்திரை பதித்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையால் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை

 

1920 ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார் ஜெமினி கணேசன். அப்போது பிரிட்டீஷ் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. இவரது தந்தை ராமசாமி ஐயர், தாயார் கங்கம்மாள்.

1940ஆம் ஆண்டே அலமேலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அலமேலு-ஜெமினி கணேசன் தம்பதிக்கு 4 குழந்தைகள். அவர்களில் ஒருவர் கமலா செல்வராஜ். அவர் தற்போது புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவராக திகழ்கிறார்.

திரைத்துறைக்கு வந்த பிறகு புஷ்பவள்ளி என்ற நடிகையையும் மணம் முடித்தார் ஜெமினி கணேசன். புஷ்பவள்ளி-ஜெமினி கணேசன் தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்தன. அவர்களில் ஒருவர் பிரபர நடிகை ரேகா.

பின்னர், தன்னுடன் இணைந்து நடித்த பிரபல நடிகையான சாவித்ரியை திருமணம் செய்து கொண்டார் ஜெமினி கணேசன்.

பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

மருத்துவர் ஆக ஆசைப்பட்ட ஜெமினி கணேசன்

ஜெமினி கணேசன், மருத்துவர் ஆக வேண்டும் என்றே கனவு கண்டார். ஆனால், அவரால் மருத்துவர் ஆக முடியாமல் போகவே இந்திய விமானப் படையில் சேர வேண்டும் என முயற்சி எடுத்தார்.

ஆனால் அவரது உறவினர் ஆசிரியராகும்படி யோசனை கூறவே மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் கெமிஸ்ட்ரி துறையில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

அதன் பிறகு தான் ஜெமினி ஸ்டுடியோவில் புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவாக பணியில் சேர்ந்தார். அப்படியே வெள்ளித்திரையில் அறிமுகமாகி தமிழ் சினிமா வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தார் ஜெமினி கணேசன்.

ஜெமினி கணேசனை கவுரவிக்கும் வகையில் 2006ம் ஆண்டு இந்திய அஞ்சல் துறை இவரது உருவம் பதித்த அஞ்சல் தலையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்