Ghilli Re Release Review: ‘வேலுவின் வேகம்.. முத்துபாண்டியன் மோகம்.. தனலெட்சுமியின் தாகம்’ கில்லி விமர்சனம்!
Vijay Ghilli Movie Review: முத்துப்பாண்டி கோபம் என்ன ஆனது? வேலுவின் வேகம் எப்படி போனது? லண்டன் தப்பிக்கலாம் என்கிற தனலெட்சுமியின் தாகம் எங்கே போனது? என்கிற மூன்று கோணத்தில் கதை முடியும்.
வெற்றி பெற்ற கதை
விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷிஸ் வித்யார்த்தி உள்ளிட்ட நிறைய திரை நட்சத்திரங்கள் நடித்து 2004 ம் ஆண்டு வெளியாகி, தமிழிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது கில்லி. தரணியின் இயக்கம், வித்யாசாகரின் இசை என கில்லியின் வெற்றிக்கு பல காரணிகள் உண்டு. இதெல்லாம் 2004ல் நடந்த அற்புதம். 20 ஆண்டுகள் கழித்து, மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்ட போது, அதே உற்சாகம் குறையாமல், சிறந்த ஓப்பனிங் பெற்று கில்லி வசூல் சாதனை படைத்திருக்கிறது. படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் போது, மீண்டும் விமர்சனம் செய்தால் தவறா? வாங்க கில்லி விமர்சனம் படிக்கலாம்!
கதை என்ன?
போலீஸ்காரர் மகனான சரவண வேலுக்கு கபடி மீது தீராத காதல். அப்பாவின் ஸ்ட்ரிக்ட், அம்மாவின் அன்பு, தங்கையின் சீண்டல் என சராசரி இளைஞனாக இருக்கும் வேலு, தந்தையை ஏமாற்றி மதுரைக்கு கபடி விளையாட செல்கிறார். மதுரையை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் முதல்வரின் மகன் முத்துப்பாண்டிக்கு, அங்கிருக்கும் தனலெட்சுமி மீது காதல், வெறி, அதுக்கும் மேல ஒருவிதமான அன்பு.
தன் காதலை அடையை காதலியின் அண்ணன்களை கூட போட்டுத் தள்ளிவிட்டு, தனலெட்சுமிக்காக செல்லம், செல்லம் என தவித்துக் கொண்டிருக்கிறார். வேலு மதுரை வரும் அந்த நேரத்தில், முத்துப்பாண்டியிடம் தப்பித்து ஓட முயற்சிக்கிறார் தனலெட்சுமி. தற்செயலாக இது வேலு கண்ணில் பட, முத்துப்பாண்டியை ஒரு வழியாக்கி, தனலெட்சுமியோடு தலைமறைவாகிறார் வேலு.
முத்துப்பாண்டி VS சரவண வேலு
சிங்கம் மாதிரி வாழ்ந்த ஊரில், அவமானப்படுத்தப்பட்டது மட்டுமின்றி, தன் தனலெட்சுமியையும் இழந்த கோபத்தில் வேலுவை வலைவீசி தேடுகிறார் முத்துப்பாண்டி. மறுபுறம் தன் வீட்டாருக்கு தெரியாமல், தன் அறையில் தனலெட்சுமியை மறைத்து வைத்து நாடகம் ஆடுகிறார் வேலு.
முத்துப்பாண்டி கோபம் என்ன ஆனது? வேலுவின் வேகம் எப்படி போனது? லண்டன் தப்பிக்கலாம் என்கிற தனலெட்சுமியின் தாகம் எங்கே போனது? என்கிற மூன்று கோணத்தில் கதை முடியும். ஓப்பனிங் சாங், இரு மெலோடி, இடைவேளைக்குப் பின் ஒரு குத்து பாடல் என்ற அந்த காலகட்டத்தின் ஃபார்முலாவை கொஞ்சம் கூட மீறாமல் எடுக்கப்பட்ட படம் கில்லி.
தெலுங்கா? தமிழா? எது பெஸ்ட்?
அதே நேரத்தில் தெலுங்கை விட இன்னும் வேகமான திரைக்கதையும், இசை கோர்ப்பும் படத்தை சொல்லி அடிக்க வைத்தது. இன்றும் வாரத்தில் ஒரு நாள் கில்லி திரையிடாத சேனலை பார்க்க முடியாது. ஆனாலும், தியேட்டருக்கு வந்து, விஜய் ரசிகர்களுக்கு அதே உற்சாகத்தை தந்திருக்கிறது. விறுவிறு திரைக்கதை, பரபர காட்சிகள், அருமையான பாடல்கள் என ஒரு ஹிட் படத்திற்கான அத்தனை அம்சங்களும் கில்லி படத்திற்கு இருந்தது. அது தான் ரீரிலிஸ் செய்யப்பட்ட பிறகும், ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இன்று தமிழ் படங்களில் வறட்சி இருப்பதாக பரவலாக பேசப்படும் நிலையில், அந்த வறட்சியை போக்க இது போன்ற பழைய படங்கள் தான் வர வேண்டும் என்றால், புதிய படங்களின் நிலையை நினைத்தால் பரிதாபமாக தான் இருக்கிறது. நல்ல படங்களை எப்போது தமிழ் சினிமா கொண்டாடும். அது புதிய படமாகத் தான் இருக்க வேண்டும் என்று இல்லை. அதற்கு உதாரணம், கில்லி மறுதிரையிடல்!
டாபிக்ஸ்