தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Veera Thirumagan: ஏவிஎம் நிறுவனத்தின் முதல் ஆக்‌ஷன் படம்.. பிரமாண்டமாக உருவான படம்.. 62 ஆம் ஆண்டில் வீரத்திருமகன்

Veera Thirumagan: ஏவிஎம் நிறுவனத்தின் முதல் ஆக்‌ஷன் படம்.. பிரமாண்டமாக உருவான படம்.. 62 ஆம் ஆண்டில் வீரத்திருமகன்

Suriyakumar Jayabalan HT Tamil
May 03, 2024 06:30 AM IST

Veera Thirumagan: வீரத்திருமகன் படத்தை அந்த காலகட்டத்திலேயே பிரமாண்டமாக உருவாக்கி, ஏ.சி. திருலோகசந்தரை இயக்குநர் ஆக்கினார். வீரத்திருமகன் இன்றுடன் வெளியாகி 62 ஆண்டுகள் ஆகின்றன.இது ஏவிஎம் நிறுவனத்தின் முதல் ஆக்‌ஷன் படமாக அமைந்தது, ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்தது.

வீரத்திருமகன்
வீரத்திருமகன்

ட்ரெண்டிங் செய்திகள்

ஏவிஎம் நிறுவனம் பிரமாணட் தயாரிப்பில் வெளியான மே 3ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து சூப்பர் ஹிட்டும் ஆகியது.

இந்த படத்தை எடுப்பதற்கு முன்பு இரண்டு கதைகளுடன் ஏ.சி. திருலோகசந்தர், ஏவிஎம் செட்டியாரை பார்த்துள்ளார். அவரது இரண்டு கதைகளுக்கு ஒகே சொன்ன செட்டியார், ஒரு கதையை பார்த்தால் பசி தீரும் என்ற பெயரில் சிவாஜி நடிக்க பீம்சிங் இயக்கத்தில் தயாரித்து ஹிட்டாக்கினார்.

இன்னொரு படமாக உருவாகிய வீரத்திருமகன் படத்தை அந்த காலகட்டத்திலேயே பிரமாண்டமாக உருவாக்கி, ஏ.சி. திருலோகசந்தரை இயக்குநர் ஆக்கினார்.

ஆபத்தில் சிக்கிகொள்ளும் ராணியை எதிர் நாடுகளிடமிருந்தும், அவர்களின் சூழ்ச்சிகளில் இருந்தும் காப்பாற்றும் ஒரு ஹீரோ என்ற ஒன்லைன்தான் படத்தின் கதை. இதை ஸ்டார் அந்தஸ்து இல்லாத நடிகர்களை வைத்து மிகவும் நேர்த்தியாகவும், அனைவரும் ரசிக்கும் விதமாக ஜனரஞ்சகமாகவும் உருவாக்கி அறிமுக படத்திலேயே பாராட்டை பெற்று கவனம் ஈர்த்தார் ஏ.சி. திருலோகசந்தர்.

இது ஏவிஎம் நிறுவனத்தின் முதல் ஆக்‌ஷன் படமாக அமைந்தது, ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்தது. அத்துடன் படம் வெளியீட்டுக்கு முன்னர் நியான் பிளெக்ஸ் போர்டில் படம் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த பெருமையும் பெற்ற முதல் படமாக வீரர்திருமகன் உள்ளது.

இந்தப் படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப ஹீரோ சி.எஸ். ஆனந்தன், சண்டை காட்சிகளிலும் சரி, மிருகங்களுடனான மோதல் காட்சிகளிலும் சரி எவ்வித் டூப்பும் போடாமல் தானே நடித்து அனைவரையும் மலைக்க வைத்தார்.

கிளாசிக் பாடல்களான ரோஜா மலரே ராஜகுமாரி, பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் போன்ற கண்ணாதாசன் வரிகளில் பாடல்கள் இடம்பெற்ற இந்தப் படத்துக்கு விஸ்நாதன் ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்திருந்தார்கள். பிளாக் அண்ட் ஒயிட் படமாக தயாரான வீரத்திருமகன் மிகப் பெரிய பொருள் செலவில் உருவாக்கப்பட்டது.

படத்தின் ஒரு பாடல் காட்சியில் ஆற்றின் நடுவே ஒரு பெரிய தாமரை மொட்டு. அது இதழ் விரிக்க அரசிளங்குமரி நிமிர்ந்து மலர, சுற்றி 12 பெரிய தாமரை இலைகள் அதன் மீது 12 பெண்கள் நின்று சுழன்று ஆடுவது போன்ற காட்சி மாமல்லபுரம் அருகே செட் அமைத்து எடுக்கப்பட்டது. இந்தக் காட்சியின் அற்புதத்தை பார்த்த தயாரிப்பாளர் ஏவிஎம் செட்டியார், இந்தக் காட்சியை மட்டும் கலரிலும் எடுக்க வைத்து அழகு பார்த்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் பாடல் இன்றளவும் எம்எஃப்களில், யூடியூப்பில் கேட்கப்படும் பாடலாக இருந்த இதை, சமீபத்தில் ராகவ லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் படத்தில் ரீமிக்ஸ் செய்தார்கள். இந்த ரீமிக்ஸ் பாடலும் ஹிட்டடித்துள்ளது.

வீரத்திருமகன் தந்த வெற்றியால் தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்பட்ட ஏ.சி. திருலோகசந்தர் பின்னாளில் எம்ஜிஆரை வைத்து அன்பே வா, சிவாஜி கணேசனை வைத்து தெய்வமகன் போன்ற கல்ட் ஸ்டேட்டஸ் படங்களை உருவாக்கினார். இதில் தெய்வமகன் படம் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையும் பெற்றது.

ஆக்‌ஷன் பாணி கதைகளை பிரமாண்டமாக உருவாக்குவதற்கு விதை போட்ட படங்களின் ஒன்றாக திகழும் வீரத்திருமகன் வெளியாகி இன்றுடன் 62 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்