Dhruva Natchathiram: 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் எப்போது? - கவுதம் வாசுதேவ் மேனன் சொன்ன தகவல்!-dhruva natchathiram is planning for the february release - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dhruva Natchathiram: 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் எப்போது? - கவுதம் வாசுதேவ் மேனன் சொன்ன தகவல்!

Dhruva Natchathiram: 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் எப்போது? - கவுதம் வாசுதேவ் மேனன் சொன்ன தகவல்!

Karthikeyan S HT Tamil
Jan 18, 2024 06:56 PM IST

பணத்தை திருப்பிக் கொடுத்தால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்பதால் கவுதம் மேனன் தரப்பு பணத்தை செட்டில் செய்யும் வேலையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விக்ரம், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்.
நடிகர் விக்ரம், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்.

பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிகர் விக்ரமை வைத்து கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கி படம் 'துருவ நட்சத்திரம்'. இதில் பார்த்திபன், சிம்ரன், ரிதுவர்மா, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து முடிக்கப்பட்டாலும் பைனான்ஸ் பிரச்னைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

இருப்பினும் துருவ நட்சத்திரத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. அதன்படி, இந்தப் படம் உலகம் முழுவதும் கடந்த நவம்பர் 24-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் 'துருவ நட்சத்திரம்' மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியது. ஆனால், இந்தப் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கக்கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள விஜய் ராகவேந்திரா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், 'சிம்புவை நாயகனாக வைத்து "சூப்பர் ஸ்டார்" என்ற படத்தை இயக்குவதற்காக, கவுதம் வாசுதேவ் மேனன் தங்களது நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார். அதற்கு முன்பணமாக கடந்த 2018ல் ரூ. 2.40 லட்சம் அளிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி அந்த பட வேலைகள் நடைபெறாத நிலையில் வாங்கிய முன்பணத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் திருப்பித் தரவில்லை. எனவே எங்களிடம் பெற்ற தொகையை திருப்பி அளிக்காமல் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பணத்தை திரும்பக் கொடுக்கும்பட்சத்தில், படத்தை வெளியிடலாம் என்று கடந்தாண்டு நவம்பர் 22 ஆம் தேதியன்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பணத்தைத் திரும்ப செலுத்தாததால், இதுவரை 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜன.18) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கவுதம் மேனன் தரப்பில், 'துருவ நட்சத்திரம்' படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இந்த வழக்கை 3 வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை 3 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். பணத்தை திருப்பிக் கொடுத்தால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்பதால் கவுதம் மேனன் தரப்பு பணத்தை செட்டில் செய்யும் வேலையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படியோ படம் ரிலீஸான சரிதான் என ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.