தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Rajisha Vijayan Falls In Love With A Cameraman

Love:காதலில் விழுந்த தனுஷ் பட நடிகை - யாருடன் தெரியுமா?

Marimuthu M HT Tamil
Feb 04, 2024 09:49 PM IST

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை காதலில் விழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காதலில் விழுந்த தனுஷ் பட நடிகை - யாருடன் தெரியுமா?
காதலில் விழுந்த தனுஷ் பட நடிகை - யாருடன் தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம், பெரும்பாறா கிராமத்தைச் சார்ந்தவர், ரஜிஷா விஜயன். ஆரம்பத்தில் சூர்யா டிவி மற்றும் மழவில் மனோரமா டிவியில் தொகுப்பாளராகப் பணிபுரிந்த ரஜிஷா விஜயன், ''அனுராக கரிக்கின் வெல்லம்''என்னும் படத்தின் மூலம் மலையாளத்திரையுலகில் அறிமுகம் ஆனார். தனது முதல் படத்திலேயே மாநில அரசின் சிறந்த நடிகை விருதையும் பெற்றார். பின், ஜூன், ஃபைனல்ஸ், லவ் ஆகிய மலையாளப் படங்களில் நடித்து தென்னிந்தியாவில் பிரபலமானார். குறிப்பாக, இவர் நடித்த ஜூன் படம் வெகுவாகப் பலரால் கவனிக்கப்பட்டது.

அதன்பின், முதல்முறையாக, 2020ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கிய ’கர்ணன்’ படத்தில் நடிகையாக தமிழில் அறிமுகமானார், ரஜிஷா விஜயன். அதன்பின் நடிகர் சூர்யாவின் ஜோடியாக, மைத்ரா எனும் சமூக செயல்பாட்டாளராக, ’ஜெய்பீம்’ படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து ’சர்தார்’ என்னும் படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடித்தார். என்னதான், தமிழில் செலக்டிவ்வான கதாபாத்திரங்களில் நடித்தாலும், மலையாளத்தில் வருடத்திற்கு குறைந்தது ஐந்து படங்களையாவது நடித்துமுடித்துவிடுகிறார், ரஜிஷா விஜயன். இந்நிலையில் தான், ஸ்டண்ட் அப், கள்ள நோட்டம், கோ கோ, லவ்ஃபுலி யுவர்ஸ் வேதா ஆகியப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய டோபின் தாமஸை ரஜிஷா விஜயன் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, 2021ஆம் ஆண்டு கோ -கோ படத்திலும், 2023ஆம் ஆண்டு லவ்ஃபுலி யுவர்ஸ் வேதா படத்திலும் கதாநாயகியாக நடிக்கும்போது டோபின் தாமஸுக்கும் ரஜிஷா விஜயனுக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

சமீபத்தில், 2023ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி ரஜிஷா விஜயனின் பிறந்தநாளின் போது, டோபின் தாமஸ் பகிர்ந்த பதிவில், ‘’எனக்கு மிகவும் பிடித்த நபர் இந்த நாளில் பிறந்தார். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் காதலே. என்னுடைய எல்லாமே. முடிவில்லாத பயணங்கள், சிரிப்புகள், திரைப்படங்கள் மற்றும் கேளிக்கைகளின் மற்றொரு வருடம் உன்னோடு’’ என காதல் பதிவினை எழுதி, அதில் இருவரும் நெருக்கமாக இருக்கும் படத்தினைப் பகிர்ந்துள்ளார்.

பிப்ரவரி 2ஆம் தேதி டோபின் தாமஸ் போட்ட இன்ஸ்டா பதிவில், '’ 1461 நாட்கள் மற்றும் சூரியனைச் சுற்றி மற்றொரு பயணத்தை எண்ணுகிறோம். இங்கே அதிக அன்பு, சிரிப்பு மற்றும் ஒருவருக்கொருவர் தத்தமது விநோத குணங்களைப் பொறுத்துக்கொள்ளுவோம்’’ என சுமார் நான்கு ஆண்டுகளாக காதலிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் பதிவு வைரல் ஆகி கோலிவுட் மற்றும் மல்லுவுட்டில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, இந்தப் பதிவுகளுக்கு ரஜிஷா விஜயனின் சினிமா தோழிகளான மமிதா பைஜூவும் ஆஹானா கிருஷ்ணாவும் வாழ்த்து கூறியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.