தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Manikkavinayagam Memorial Day: கண்ணுக்குள்ள கெளுத்தி முதல் நாலுகாலு பாய்ச்சலுல வரை பாடகர் மாணிக்கவிநாயகத்தின் நினைவலைகள்

ManikkaVinayagam Memorial Day: கண்ணுக்குள்ள கெளுத்தி முதல் நாலுகாலு பாய்ச்சலுல வரை பாடகர் மாணிக்கவிநாயகத்தின் நினைவலைகள்

Marimuthu M HT Tamil
Dec 26, 2023 06:30 AM IST

பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகத்தின் நினைவுதினம் குறித்தான சிறப்புக் கட்டுரையினைக் காணலாம்.

ManikkaVinayagam Memorial Day: கண்ணுக்குள்ள கெளுத்தி முதல் நாலுகாலு பாய்ச்சலுல வரை பாடகர் மாணிக்கவிநாயகத்தின் நினைவலைகள்
ManikkaVinayagam Memorial Day: கண்ணுக்குள்ள கெளுத்தி முதல் நாலுகாலு பாய்ச்சலுல வரை பாடகர் மாணிக்கவிநாயகத்தின் நினைவலைகள்

ட்ரெண்டிங் செய்திகள்

யார் இந்த மாணிக்க விநாயகம்? மாணிக்க விநாயகம் அன்றைய மதராஸ் மாகாணத்தில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி 1943ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் பிறந்து வளர்ந்தவர். இவரது குடும்பமும் ஒரு கலைக்குடும்பத்தைச் சார்ந்தது எனலாம். பின்னணிப்பாடகர் மாணிக்க விநாயகத்தின் தந்தை, வழுவூர் ராமையா பிள்ளை பரதநாட்டிய கலைஞராகவும்; இவரது தாய்மாமன் சி.எஸ். ஜெயராமன் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் இருந்தவர்.

ஆரம்பத்தில் மாமா சி.எஸ். ஜெயராமன் தான், மாணிக்க விநாயகத்துக்கு கர்நாடிக் மற்றும் ஹிந்துஸ்தானி இசையை அறிமுகப்படுத்தியுள்ளார். அதை இறுகப்பற்றிக்கொண்ட மாணிக்கவிநாயகம் அதில் இருந்து படிப்படியாக தனது இசை ஆர்வத்தைப் பெருக்கிக் கொண்டார். அந்த ஆர்வம் மாணிக்க விநாயகத்தை நாதஸ்வரம் நன்றாக வாசிக்கும் கலைஞராகவும் மாற்றியது.

பின், பக்திப் பாடல்கள், கர்நாடக இசைப்பாடல்களை கேசட்டுகளாகப் பதிவுசெய்து ரிலீஸ் செய்த மாணிக்க விநாயகம், ஸ்டார்லிங்ஸ் என்ற ஆர்கெஸ்ட்ராவையும் நடத்திக்கொண்டிருந்தார்.

விக்ரம் கதாநாயகனாகவும் லைலா கதாநாயகியாகவும் நடித்த தில் படத்தில் 'கண்ணுக்குள்ள கெளுத்தி’என்னும் பாடலைப் பின்னணியில் பாடி, பாடகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் இவரது தனித்துவமான குரலுக்காக அடுத்தடுத்து பாடும் வாய்ப்பு, தமிழ் சினிமாவில் கிடைத்தது.

அதனையடுத்து தவசி படத்தில் ’ஏல இமயமலை’ என்னும் பாடலையும், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் 'விடைகொடு எங்கள் நாடே’ஆகியப் பாடலையும் பாடினார். இப்பாடல் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் வலியை உரைக்கும் கீதமாக மாணிக்க விநாயகத்தின் குரலில் கேட்கப்படுகிறது.

அதன்பின் 'ரன்' படத்தில் ‘தேரடி வீதியில் தேவதை வந்தால் திருவிழான்னு தெரிஞ்சுக்க', ரோஜாக் கூட்டம் படத்தில் ‘சுப்பம்மா சுப்பம்மா’ என்னும் பாடலையும், ஜெயம் படத்தில் ‘வண்டி வண்டி ரயிலு வண்டி’ ஆகிய அடுத்தடுத்த ஹிட் பாடல்களைப் பாடி கோலிவுட்டில் தனது முத்திரையைப் பதித்தார், மாணிக்கவிநாயகம்.

பின், 'தூள்' திரைப்படத்தில் 'கொடுவா மீசை அரிவாள் பார்வை', ஒற்றன் படத்தில் 'சின்ன வீடா வரட்டுமா' என்னும் பாடலையும், திருப்பாச்சி படத்தில் ‘கட்டு கட்டு கீரை கட்டு’ என்ற பாடலையும் பாடினார்.

அதனைத்தொடர்ந்து, ரஜினியின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான சந்திரமுகியில், ''கொக்கு பற பற'’பாடலைப் பாடி, உச்ச முன்னணிப் பாடகர் ஆனார்.

அதேபோல், சிவப்பதிகாரம் படத்தில் 'மன்னார்குடி கலகலக்க’ என்னும் பாடலையும், பருத்திவீரன் படத்தில் ஏலே ஏலே ஏலோ.. அய்யய்யோ என்னும் பாடலையும், அரண் திரைப்படத்தில் ’அல்லாவே எங்களின் தாய் பூமி’என்னும் பாடலையும் பாடினார்.

அதேபோல்,'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் ‘அமெரிக்கா என்றாலும் ஆண்டிபட்டி என்றாலும்’ என்ற பாடலையும், சிங்கம் படத்தில் ‘நாலு காலு பாய்ச்சலுல’ என்னும் பாடலையும் பாடி புகழ்பெற்றவர்.

அத்தகைய புகழ்பெற்ற மாணிக்கவிநாயகம், 2021ஆம் ஆண்டு, டிசம்பர் 26ஆம் தேதி, தனது 78ஆவது வயதில் மாரடைப்புக் காரணமாக சென்னையில் காலமானார்.  அவர் மறைந்தாலும் அவரது கம்பீரக்குரல் இன்னும் பல ஆண்டுகளுக்கு நமது காதில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்