தமிழ் செய்திகள்  /  Elections  /  Tamilisai Soundararajan Resigns As Governor - Chance To Contest Parliamentary Elections

Tamilisai Soundararajan Resign: ஆளுநர் பதவியில் இருந்து தமிழிசை ராஜினாமா! தேர்தலில் போட்டியிட திட்டம்!

Kathiravan V HT Tamil
Mar 18, 2024 11:05 AM IST

”Loksabha Election 2024: 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்டிவ் அரசியலில் இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் இதுவரை போட்டியிட்ட ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற்றது இல்லை”

ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழிசை சவுந்தராஜன் போட்டியிடலாம் என ஏற்கெனவே கூறப்பட்ட நிலையில் தற்போது அவரது பதவியை தமிழிசை ராஜினாமா செய்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

புதுச்சேரி, தென்சென்னை, கன்னியாகுமரி ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் தமிழிசை சவுந்தராஜன் போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 

தென் சென்னை தொகுதி!

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்டிவ் அரசியலில் இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் இதுவரை போட்டியிட்ட ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற்றது இல்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியை குறி வைத்த நிலையில் அது கூட்டணியில் இருந்த அதிமுகவின் ஜெயவர்தனுக்கு சென்றதால் வேறு வழியின்றி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் அவரது தோல்விக்கு காரணங்களாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் தென் சென்னை மக்களவை தொகுதி அவருக்கு சாதகமானதாக இருக்கும் என கருதப்படுகிறது. ஏற்கெனவே கடந்த 2011ஆம் ஆண்டு வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியிலும், 2016ஆம் ஆண்டு தனது இல்லம் அமைந்திருக்கும் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிலும் போட்டியிட்ட அனுபவம் தமிழிசைக்கு உள்ளது.

அதுமட்டுமின்றி மயிலாப்பூர், தி.நகரில் உள்ள பிராமணர்களில் வாக்குகள் கணிசமாக கிடைக்கும் பட்சத்தில் வெற்றி இலக்கை அடைந்துவிடலாம் என்பது தமிழிசையின் திட்டமாக உள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தராஜன் அப்பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவராக உள்ளார். ஆளுநராக தன்னை வெறும் மாளிகைக்குள் மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, மக்களுடன் கலந்துரையாடுவது உள்ளிட்ட பணிகளை தமிழிசை செய்து வந்தார். எனவே புதுச்சேரி தொகுதி தமிழிசைக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியை பொறுத்தவரை அத்தொகுதி தமிழிசை சவுந்தராஜனின் பூர்வீக தொகுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக பலமாக உள்ள தொகுதிகளில் ஒன்றாக கன்னியாகுமரி தொகுதி உள்ளது.  அத்தொகுதில் ஏற்கெனவே மத்திய இணை அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படும் நிலையில் தமிழிசை பெயரும் அடிபடத் தொடங்கி உள்ளது. 

மத்திய அமைச்சர் பதவி

மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் பாஜக சார்பில் ஜெயிப்பவர்களுக்கும் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக மத்திய அமைச்சர் பதவி தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் பாஜக சார்பில் வெற்றி பெற்று மத்திய அமைச்சர் பதவியை பிடிக்க போட்டா போட்டி நிலவுகிறது. 

WhatsApp channel

டாபிக்ஸ்