MK Stalin: ’ராகுல் அவர்களே வருக! புதிய இந்தியாவுக்கு விடியல் தருக!’ கோவையில் முதல்வர் பரப்புரை!
”எப்போதும் வெளிநாட்டில் டூரில் இருக்கும் மோடி அவர்கள் இப்போது உள்நாட்டில் டூரில் உள்ளார். தனது ஆட்சியின் சாதனைகளை பேசுவதற்கு பதிலாக இந்தியா கூட்டணி கட்சிகளை வசைபாடுகிறார்”
கோயம்புதூரில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு பரப்புரை மேற்கொண்டனர்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கோவை மாவட்டத்தின் மண்ணின் மைந்தர். கோவை மக்கள் விரும்பக்கூடிய அமைதி குணத்தை கணபதி ராஜ்குமார் பெற்றவர்.
மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய என்னுடைய பரப்புரை பயணங்கள் மாநாடு போல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
நாடு சந்திக்க இருக்க கூடிய இரண்டாம் விடுதலை போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கைகளை வலுப்படுத்த திமுக தயாராக உள்ளார். எப்போதும் வெல்லும் கூட்டணியாக திமுக-காங்கிரஸ் கூட்டணி உள்ளது. அன்னை சோனியா காந்தி மீதும், ராகுல் காந்தி மீதும் தமிழ்நாடு மக்கள் தமிழ்மக்கள் அன்பு வைத்துள்ளனர். ராகுல் அவர்களே வருக! புதிய இந்தியாவுக்கு விடியல் தருக! சகோதரர் ராகுல் அவர்களின் நடை பயணத்தை நான் தான் தொடங்கி வைத்தேன்.
இந்த எலெக்ஷனின் ஹீரோவே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைதான். திமுக வலியுறுத்தும் சமூகநீதி அம்சங்கள் அதில் உள்ளது. ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய், பெண்களுக்கு மத்திய அரசு பணிகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, எஸ்சி., எஸ்.டி., ஓபிஎஸ் பிரிவுக்கான காலி பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிறப்பப்படும், ஜிஎஸ்டிக்கு பதிலாக புதிய சட்டம், வேளாண் இடுபொருட்களுக்கு ஜிஎஸ்டி ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை ராகுல் கொடுத்து உள்ளார்.
எப்போதும் வெளிநாட்டில் டூரில் இருக்கும் மோடி அவர்கள் இப்போது உள்நாட்டில் டூரில் உள்ளார். தனது ஆட்சியின் சாதனைகளை பேசுவதற்கு பதிலாக இந்தியா கூட்டணி கட்சிகளை வசைபாடுகிறார். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். யாருக்கும் நேராக பதவி வருவது அல்ல; தேர்தலில் மக்களை சந்தித்தால்தான் அரசியலுக்கு வர முடியும்.
ஊழலுக்கு ஒரு யூனிவர்சிட்டி கட்ட வேண்டுமென்றால் அதற்கு வேந்தராக இருக்க தகுதியானவர் நரேந்திர மோடிதான், தேர்தல் பத்திரங்கள் மூலம் ஊழலை சட்டப்பூர்வமாக்கியது நீங்கள்தானே.
பாஜகவுக்கு பணம் தந்த கம்பெனிகள் மீது எப்போது ரெய்டு விட்டீர்கள்! பி.எம்.கேர்ஸ் நிதி குறித்து கேள்வி கேட்டால் அது தனி அறக்கட்டளை என்று சொல்கிறார்கள்.
எதற்காக தேர்தலில் நிற்கிறோம் என்ற தெளிவு இல்லாமல், கள்ளக்கூட்டணிக்கு ஆதரவு தேட தேர்தலில் பழனிசாமி நிற்கிறார். பாஜகவை எதிர்த்து பேச முடியாது, அது கூட்டணி தர்மம் என்று அவர் சொல்கிறார்.
தமிழ்நாட்டை சேர்ந்த மிகப்பெரிய தொழில் நிறுவனம் 6500 கோடி ரூபாய் முதலீட்டில் கோவையில் பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க திட்டமிட்டது, தமிழ்நாடு அரசு எல்லா பேச்சுவார்த்தைகளையும் முடித்து வைத்து இருந்தோம். ஆனால் அவர்களை மிரட்டி அந்த தொழிலை குஜராத்துக்கு மாற்றிவிட்டார்கள். இதுதான் கோவைக்கான பாஜகவின் போலி பாசம். எதிர்காலத்தில் மிகப்பெரிய வாய்ப்பு வரும் என்பதால் செமிகண்டெக்டர் திட்டத்தை குஜராத்துக்கு மிரட்டி மடை மாற்றிவிட்டார்கள். இப்போது கூச்சமே இல்லாமல் ஓட்டு கேட்டு வருகிறீர்கள். பாஜக போன்ற கலவர கட்சிகளை உள்ளேவிட்டால் தொழில் வளர்ச்சி போய்விடும். தமிழ்நாட்டை புறக்கணித்தால் தமிழ் மக்கள் பதில் எப்படி இருக்கும் என்பதை ஏப்ரல் 19ஆம் தேதி உங்கள் வாக்குகள் மூலம் காண்பிக்க வேண்டும்.
டாபிக்ஸ்