தமிழ் செய்திகள்  /  Elections  /  Announcement Of Robert Bruce As Congress Candidate For Tirunelveli Parliamentary Constituency

Nellai Congress Candidate: நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்! மயிலாடுதுறையில் இழுபறி நீடிக்கிறது!

Kathiravan V HT Tamil
Mar 25, 2024 07:10 PM IST

”மயிலாடுதுறை தொகுதிக்கு இன்று இரவுக்குள் வேட்பாளர் அறிவிக்கப்படும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்”

நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்
நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

காங்கிரஸ் வேட்பாளர்கள் 

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலை போலவே இந்த முறையும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கோபிநாத், கடலூர் விஷ்ணுபிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த், கரூரில் ஜோதிமணி, புதுச்சேரியில் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

திருநெல்வேலி மற்றும் விளவங்கோடு வேட்பாளர்

திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளுக்கும், மற்றும் இடைத் தேர்தல் நடைபெறும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், தற்போது திருநெல்வேலி தொகுதிக்கு காங்கிரஸ் துணைத் தலைவராக உள்ள ராபர்ட் புரூஸ் மற்றும் விளவங்கோடு சட்டம்ன்றத் தொகுதிக்கு தாரகை ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

மயிலாடுதுறைக்கு யார்?

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் தலைமைக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்தொகுதியில் பிரவீன் சக்ரவர்த்தி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மணிசங்கர் ஐயர் மூத்த மகள் சுரண்யா ஐயரும் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட விரும்பம் காட்டி வருகிறார். மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 

இதுமட்டுமின்றி திருச்சி எம்.பியாக இருந்த திருநாவுக்கரர், மயிலாடுதுறை தொகுதியை குறி வைத்து காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. 

’இன்று இரவுக்குள் வேட்பாளரை அறிவிப்போம்’- செல்வப்பெருந்தகை!

இது தொடர்பாக பேசி உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மயிலாடுதுறை தொகுதியில் இழுபறி ஏதும் இல்லை, காங்கிரஸ் என்பது தேசியக் கட்சி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு மாநிலமாக கொடுக்கும் ரிப்போர்ட்டைவைத்தும், அவர்கள் சர்வே செய்தும் வேட்பாளரை அறிவிக்கின்றனர். 

வேட்பாளர் யார் என்பது இன்று இரவுக்குள் தெரிந்துவிடும், வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்கள் நேரம் உள்ளது.  எங்கள் தலைவர்கள் ஆய்வு செய்து யார் வெற்றி வேட்பாளர் என ஆய்வு செய்து நாங்கள் அறிவிப்போம். 

நெல்லை வேட்பாளர் ராபர்ட் புரூஸ்  கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவர், கன்னியாகுமரியில் இந்து நாடாருக்கும், நெல்லை தொகுதியில் கிறித்தவ நாடாருக்கும் சீட் கொடுத்துள்ளோம். அனைத்து மக்களாளும் ஏற்றுக் கொள்ள கூடிய வேட்பாளராக வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் உள்ளார். 

விளவங்கோடு இடைத்தேர்தலில் சாதாரண பெண்மணியான தாரகைக்கு வேட்பாளர் சீட் கொடுத்துள்ளோம். அவருக்கு சொந்த வீடு கூடு கிடையாது, அவர்கள் வீடு ஏலத்தில் சென்றுவிட்டது. பெண்களை மதிக்கின்ற, பெண்களை முன்னிருத்தும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. 

தாரகை சாதாரண குடும்ப பின்னணியை சேர்ந்தவர், அவர் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறார், எங்கள் பரிந்துரையை ஏற்று கட்சித் தலைமை அவரை வேட்பாளராக அறிவித்துள்ளது என கூறி உள்ளார். 

WhatsApp channel