தமிழ் செய்திகள்  /  Elections  /  Eps Announces Admk's Nellai Candidate Changed For Upcoming Loksabha Election 2024

Nellai ADMK Candidate: நெல்லை அதிமுக வேட்பாளர் சிம்லா முத்துசோழன் திடீர் மாற்றம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு!

Karthikeyan S HT Tamil
Mar 23, 2024 06:34 PM IST

Nellai ADMK Candidate: வரும் மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சிம்லா முத்துசோழன் மாற்றப்பட்டு புதிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை அதிமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டு புதிய வேட்பாளராக ஜான்ஸிராணி அறிவிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை அதிமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டு புதிய வேட்பாளராக ஜான்ஸிராணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 19.4.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலில் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் சிம்லா முத்துசோழன் அவர்களுக்கு பதிலாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஜான்சிராணி தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மக்களவைத் தொகுதி வேட்பாளராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜான்சி ராணி, திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக இணைச் செயலாளராகவும், திசையன்விளை பேரூராட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் முன்னாள் அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆகவும் இருந்துள்ளார்.

முன்னதாக, திமுக முன்னாள் பெண் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகளும், ஆர்.கே.நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன் நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிடுவார் என்று அதிமுக அறிவித்திருந்தது. இந்த நிலையில், சிம்லா முத்துசோழனுக்கு பதிலாக ஜான்சி ராணியை நெல்லை தொகுதி புதிய வேட்பாளராக அதிமுக அறிவித்துள்ளது.

சிம்லா முத்துசோழன் பின்னணி

கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்விகமாகக் கொண்டவர் சிம்லா முத்துசோழன். திமுக துணை பொதுச் செயலாளரும் ,முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் இரண்டாவது மருமகள் ஆவார். பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். வழக்கறிஞர் தொழில் செய்து வரும் சிம்லா முத்துசோழன், சுமார் 20 ஆண்டுகளாக திமுகவில் பணியாற்றி வந்தார். கடந்த 2016ஆம் ஆம்டு சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் சிம்லா முத்துச்சோழன். இருப்பினும் தொடர்ந்து திமுகவில் பயணித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவில் அங்கீகாரம் இல்லை என்று குற்றம்சாட்டி இருந்தார்.

திமுக டூ அதிமுக

சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த சிம்லா முத்துச்சோழன் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் சீட் வழங்குவதாக அறிவித்தது அதிமுக தலைமை. ஆனால், தற்போது சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக திசையன்விளை பேரூராட்சி மன்றத் தலைவராக இருக்கும் ஜான்சி ராணியை புதிய வேட்பாளராக அறிவித்துள்ளது அதிமுக தலைமை.

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

WhatsApp channel

டாபிக்ஸ்