தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Aiadmk Results: ‘7 இடங்களில் டிபாசிட் காலி..’ என்ன செய்யப் போகிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி?

AIADMK Results: ‘7 இடங்களில் டிபாசிட் காலி..’ என்ன செய்யப் போகிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி?

Jun 05, 2024, 11:31 AM IST

  • AIADMK Results: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி சந்தித்த முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தலை மிக முக்கிய தேர்தலாக அதிமுகவினர் சந்தித்தனர். தேர்தல் அறிவிப்புக்கு முன்பு இருந்ததை விட, தேர்தல் அறிவிப்புக்குப் பின் அதிமுகவினர் இன்னும் உற்சாகமாக பணியாற்றினார்கள். குறிப்பாக எடப்பாடியின் பிரசாரம், அதிமுகவினரை உற்சாகப்படுத்தியது என்ற கூட சொல்லலாம். அதுவரை அதிமுகவினரில் இல்லாத எழுச்சியை எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்தில் காண முடிந்தது. குறைந்தது 5 சீட்டுகளாவது எடப்பாடி கைப்பற்றுவார் என்று தான் பெரும்பாலானோர் ஆருடம் கூறினார்கள். அதற்கான வாய்ப்புகளும் இருந்தது. இருந்தாலும் கூட்டணி என்கிற இடத்தில் வசமாக சிக்கிக் கொண்டது அதிமுக. என்ன தான் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., என்கிற கூட்டணி இருந்தாலும், திமுக வசம் இருந்த கூட்டணியோடு ஒப்பிடும் போது, அது கடுகளவு தான். இருப்பினும் அதிமுக களத்தில் திமுகவுடன் சமபலத்துடன் மோதியது. பல தொகுதிகளில் அது முடிவுகள் மூலமும் தெரியவந்தது. இருப்பினும் அதிமுகவுக்கு கசப்பான தகவல், 7 தொகுதிகளில் டிபாசிட் இழந்தது தான். தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது அதிமுக. தென் சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதெல்லாம், பின்னடைவின் உச்சம். தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் சகஜமான ஒன்று தான். ஆனால், தோல்வியிலும் ஒரு வெற்றிகரமான தோல்வி இருக்க வேண்டும் என்பார்கள். அது பல தொகுதிகளில் அதிமுகவுக்கு கிடைத்தாலும், தங்கள் பரமவைரிகள் போட்டியிடும் தொகுதிகளில் சரிவை சந்தித்தது, அந்த பகுதியில் சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பாணியில் சாட்டையை சுழற்றினால் தான் அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலை பலத்தோடு சந்திக்க முடியும். குறைந்தபட்சம் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் என்பது போன்ற அஸ்திரத்தை கையில் எடுப்பாரா எடப்பாடி பழனிச்சாமி? பொறுந்திருந்து பார்க்கலாம்.