தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  மழையால் சாலையில் ஏற்பட்ட குழியில் தேங்கிய நீரில் குளித்து விநோத போராட்டம்!

மழையால் சாலையில் ஏற்பட்ட குழியில் தேங்கிய நீரில் குளித்து விநோத போராட்டம்!

Aug 10, 2022, 07:44 PM IST

மழை காரணமாக சாலையில் வழக்கத்துக்கு மாறாக குழிகள் ஏற்படுவதும் அதனால் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் ஏற்படுவது பெங்களூரு போன்ற நகரங்களில் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த முறை கேரளாவில் அதுபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கவனத்தை ஈர்க்கும் விதமாக வித்தியாசமான போராட்டம் ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. மல்லாபுரம் பகுதியில் ஒரு நபர் மழையால் ஏற்பட்ட குழியில் தேங்கி இருந்த மழை நீரில் குளித்து, துணி துவைத்து, யோகா செய்த விடியோ வைரல் ஆகியுள்ளது. வாளி, துண்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்ற அந்த நபர், மழையினால் தேங்கியிருக்கும் நீரில் இறங்கி குளித்துள்ளார். அந்த வழியே தொகுதி எம்எல்ஏ வரும் நேரம் பார்த்து இதனை செய்துள்ளார். அவர் எதிர்பார்த்தது போலவே எம்எல்ஏ-வும் அப்போது காரில் வந்த நிலையில், திடீரென சேற்று தண்ணீரில் குளித்துக்கொண்டிருந்த அந்த நபர் தியானத்திலும், யோகாசனத்திலும் ஈடுபட்டார். கடந்த இருநாள்களுக்கு முன் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள நெடும்பஸ்சேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 52 வயது நபர் ஒருவர் பைக்கில் சென்றபோது, சாலையில் இருந்த குழியில் இறங்கியதால் நிலைதடுமாறி லாரி மீது மோதி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சாலைகளில் ஏற்படும் குழிகளை சரி செய்ய வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தை அந்த நபர் நடத்தியுள்ளார்.