திருவள்ளூரில் வீடுகளை இடிப்பு! தீக்குளித்த இளைஞர்! பதற வைக்கும் வீடியோ! அரசை விளாசும் ராமதாஸ், அண்ணாமலை!
Jul 04, 2024, 10:24 PM IST
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறி வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவத்தில் இளைஞர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூரில் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி வீடுகளை இடித்ததால் தீக்குளித்த இளைஞர் தீக்குளித்த சம்பவத்தில் தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
மருத்துவர் ராமதாஸ் கண்டனம்
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் ‘எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டை ஆக்கிரமிப்பு என்று கூறி அதிகாரிகள் இடிக்க முற்பட்டதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான வீட்டு உரிமையாளர் ராஜ்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இதற்கு காரணமான அதிகாரிகளின் செயல் கண்டிக்கத்தக்கது.
தூண்டிவிட்டது யார்?
அரசுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை செல்வாக்கு மிக்க நபர்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் அவர்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள், பட்டா நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் வீட்டை இடிக்க துடிப்பது ஏன்? அவர்களை தூண்டி விட்டவர்கள் யார்?
ஏழைகள் வாழவே முடியாது
திமுக ஆட்சியில் சட்ட விரோதமாக செயல்படக்கூடிய பணக்காரர்கள் மட்டும்தான் வாழ முடியும், நேர்மையான ஏழைகள் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டு இருப்பதையே கும்மிடிப்பூண்டி நிகழ்வு காட்டுகிறது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் ஏழைகள் வாழவே முடியாது.
கும்மிடிப்பூண்டி நிகழ்வுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள இளைஞர் ராஜ்குமாருக்கு தரமான மருத்துவம் அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
அண்ணாமலை கண்டனம்
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட S.V. G புரம் ஊராட்சியில், பட்டா இடத்தில் வீடு கட்டி வசித்து வந்த ஐம்பதுக்கும் அதிகமான வீடுகளை, எந்த வித முன்னறிவிப்புமின்றி, வீடுகளில் இருந்த பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியில் தள்ளித் துன்புறுத்தி, அத்துமீறி இடித்துத் தள்ளியிருக்கிறது திமுக அரசு.
பட்டா இருந்தும் வீடுகள் இடிப்பு
பட்டா இருந்தும் தங்கள் வீடுகள் இடிக்கப்பட்டதால், ஒதுங்க இடமின்றி, வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் பந்தல் அமைத்து அமர்ந்திருந்த, எட்டு பெண்கள் உட்பட 25 பேரையும் கைது செய்து அத்து மீறியிருக்கிறது காவல்துறை. திருத்தணி யூனியன் பாஜக மண்டலத் தலைவர் திரு வீர பிரம்மச்சாரி மற்றும் ஆர்.கே.பேட்டை மண்டலத் தலைவர் திரு S.K.பாலாஜி ஆகியோரையும் கைது செய்திருக்கிறது திமுக அரசு.
கும்மிடிப்பூண்டியில், பட்டா இடத்தில் கட்டப்பட்ட தனது வீட்டை இடித்ததால், இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகும் முன், திருவள்ளூரில் ஐம்பதுக்கும் அதிகமான வீடுகளை இடித்துத் தள்ளியிருக்கிறது திமுக அரசு.
வன்மையாக கண்டிக்கின்றேன்
திமுகவின் இந்த பொதுமக்கள் விரோத அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குவதோடு, பட்டா இடத்தை மீண்டும் அவர்களுக்கே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
Google News: https://bit.ly/3onGqm9