44 Years of Pasi: உடலில் வயிறு ஏன் இருக்கிறது?' ருசி அறிந்த நமக்கு பாடம் சொல்லும் 'பசி'
Dec 21, 2023, 06:21 AM IST
"கோதைக்கோ மானப்பசி.. குழந்தைக்கோ வயிற்றுப்பசி.. காமுகனுக்கோ காமப்பசி.. காலத்திற்கோ மரணப்பசி.." என்ற வரிகள் 44 ஆண்கள் கடந்தும் கூட இன்றும் கூட பொருந்திப் போகிறது.. ஆமாம் என்று தீரும் இந்த பசி.. அன்று புது உலகம் மலரும்.. அதுவரை துரையின் இந்த பசி நம்மை விட்டு அகலாது..
44 ஆண்டுகளாகியும் தமிழ் திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத படம் "பசி"... 1979ன் இறுதியான டிசம்பர் 21 அன்று வெளியான பசி திரைப்படம் குறித்து பார்க்கலாம்..
இயக்குனர் துரை இயக்கிய பசி திரைப்படம் சென்னையின் கூவம் ஆற்றின் கரையில் வாழும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் பாடுகளை அழுத்தமாக எடுத்து காட்டிய யதார்த்த சினிமா. சிறந்த இயக்குனர் , திரைப்படம், நடிகை என்று மூன்று தேசிய விருதுகளோடு மாநில அரசு விருதுகள், பிலிம்பேர் விருதுகள் அனைத்தையும் மொத்தமாய் அள்ளி கொண்ட படம்.
கௌரவ தோற்றத்தில் கமல்ஹாசன். ஜெயபாரதி.சுருளிராஜன் ஆகியோரும் இந்த படத்தில் உள்ளனர்
வாடகை ரிக்சா ஓட்டி பிழைக்கும் முனியனாக டெல்லி கணேஷ் தினமும் ஏழு ரூபாய் சம்பாத்தியத்தில் குடும்ப செலவுகளுக்கு மூன்று ரூபாய் மட்டும் கொடுக்கும் கறார் பேர்வழி. மீதியை தனது சாராயம் இத்யாதி செலவுகளுக்கு வைத்து கொள்வார்.
ஆறுபிள்ளைகளோடு மொத்த குடும்பத்தையும் புலம்பிக்கொண்டே பார்த்து கொள்ளும் மனைவி. குடும்பத்தில் மூத்த மகளாக ஷோபா ஒடிசலான தேகத்தோடு மிக நேர்த்தியாக குப்பம்மாள் கதாபாத்திரத்துக்கு பொருத்தம் ஆக இருப்பார். குடும்ப செலவுகளை ஈடுகட்ட தனது தோழி செல்லம்மா துணையோடு குப்பை காகிதம் பொறுக்கி அம்மாவுக்கு கூடுதலாக இரண்டு ரூபாய் தருவாள்.
தோழியோடு செய்யும் வேலை யில் தேநீர் கடைப்பக்கம் செல்லும் போது தோழிக்கு தெரிந்த நபரான லாரி டிரைவர் அரங்கனுடன் அறிமுகம் கிடைக்கிறது. நடிகர் விஜயன் அரங்கனாக குப்பம்மாவுக்கு உதவி வருகிறார். இந்த நிலையில் கள்ளச்சாராய வழக்கு ஒன்றில் தந்தை முனியன் சிறைக்கு செல்லும் போது அரங்கன் உதவியால் ஜாமினில் மீட்டு வருகிறார். இந்நிலையில் அரங்கனின் நம்பிக்கையான வார்த்தைகளை நம்பி ஒரு கட்டத்தில் தன்னையே அவனிடம் இழக்கிறாள். அவளது அம்மாவுக்கு தெரியும் போது ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.
இந்த துயரங்களோடு குப்பம்மாள் கர்ப்பம் ஆகியதை அறிந்து அரங்கனை தேடி செல்லும் போது அவன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை அறிகிறாள். சுற்றி உள்ள எல்லோரும் அவள் கர்ப்பம் தரிக்க அரங்கன் தான் காரணம் என்று கண்டறிந்து அவனை தாக்கும் போது கூட அவனை காட்டி கொடுக்காமல் இருப்பாள்.. அழகான குழந்தை பிறக்கும் போது அவளது உயிரும் பிரிந்த நிலையில் அவளை தேடி அரங்கன் மற்றும் அவன் மனைவியும் வருவார்கள்.. உயிர் இழந்து கிடப்பது குப்பம்மாள் என்றறிந்து பிறந்த குழந்தையை தூக்கி கொள்வாள்..
இப்படியாக படம் நெடுக பசி மற்றும் பேதை பெண்களின் சமூக அவலங்களை முழுக்க மெட்ராஸ் பாஷையில் பேசிய படம். சங்கர் கனேஷ் இசை பல இடங்களில் பலம். ரங்கா அவர்களின் ஒளிப்பதிவு கூடுதல் வலு சேர்க்கும். ஷோபா ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருப்பார். இயக்குனர் சசி ஒவ்வொரு காட்சியிலும் நம்மையும் அறியாமல் கதைக்களத்துக்குள் நடமாட விட்டிருப்பார். படத்தின் end card என்டு கார்டில்
"கோதைக்கோ மானப்பசி..
குழந்தைக்கோ வயிற்றுப்பசி..
காமுகனுக்கோ காமப்பசி..
காலத்திற்கோ மரணப்பசி.."
என்ற வரிகள் 44 ஆண்கள் கடந்தும் கூட இன்றும் கூட பொருந்திப் போகிறது.. ஆமாம் என்று தீரும் இந்த பசி.. அன்று புது உலகம் மலரும்.. அதுவரை துரையின் இந்த பசி நம்மை விட்டு அகலாது..
டாபிக்ஸ்