Cauvery issue: ’ரஜினி ஆதரவு யாருக்கு? கர்நாடகாவுக்கா? தமிழ்நாட்டுக்கா?’ வாட்டாள் நாகராஜ் கேள்வி
Sep 28, 2023, 06:04 PM IST
”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடகாவுக்கு வரக்கூடாது என்றும், அவரது படங்களை அம்மாநிலத்தில் புறக்கணிக்க வேண்டும் என்றும் நாகராஜ் கூறியுள்ளார்”
தமிழ்நாட்டுக்கு காவிரி நதிநீர் திறந்துவிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநிலம் முழுவதும் நாளை மாநிலம் தழுவிய பந்த் நடைபெற உள்ளது. கன்னட ஆதரவு குழுக்களின் கூட்டு அமைப்பான 'கன்னட ஒக்குடா' அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலியாக அம்மாநில தலைநகரான பெங்களூருவில் இன்று இரவு 12 மணி முதல் நாளை வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் பந்த் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கர்நாடக பந்த் வெற்றியடையும், 1,900க்கும் மேற்பட்ட சங்கங்கள் மற்றும் கன்னட சார்பு அமைப்புகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பெலகாவி அல்லது பிடார் முதல் சாமராஜநகர் வரையிலும், மங்களூரு முதல் கோலார் வரையிலும், அனைவரும் பந்த் கடைப்பிடிக்க தயாராக உள்ளனர்," என்று 'கன்னட ஒக்கூட்டா' தலைவர் வாட்டாள் நாகராஜ் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடகாவுக்கு வரக்கூடாது என்றும், அவரது படங்களை அம்மாநிலத்தில் புறக்கணிக்க வேண்டும் என்றும் நாகராஜ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், பெங்களூருவில் பல ஆண்டுகாலமாக தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டாமா?; வேண்டாமென்றால் தமிழர்களை தமிழ்நாட்டுக்கே அழைத்துக் கொள்ளுங்கள். ரஜினிகாந்த் கர்நாடகம் பக்கம் நிற்கிறாரா? அல்லது தமிழ்நாட்டின் பக்கம் நிற்கிறாரா என்பதை தெரிவிக்க வேண்டும் என வாட்டாள் நாகராஜ் கூறி உள்ளார்.