Erode MP Ganesamoorthy: யார் இந்த ஈரோடு எம்பி கணேச மூர்த்தி.. இறுதிவரை வைகோவுடன் பயணித்த கணேச மூர்த்தி.. பின்னணி இதோ!
Mar 28, 2024, 07:29 AM IST
Ganesamoorthy MP:1993-இல் திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது அவருக்கு ஆதரவு தெரிவித்து வெளியேறிய ஒன்பது மாவட்ட செயலாளர்களில் கணேசமூர்த்தியும் ஒருவர். வைகோவுடன் திமுகவில் இருந்து வெளியேறியவர்கள் பின்நாட்களில் மதிமுகவில் இருந்து வெளியேறிய போதும் இறுதிவை மதிமுகவிலேயே வைக்கோவுடன் துணை நின்றவர்.
Erode MP Ganesamoorthy: ஈரோடு எம்பி கணேச மூர்த்தி தற்கொலைக்கு முயன்றநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
யார் இந்த கணேச மூர்த்தி?
அ. கணேசமூர்த்தி தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மறுமலர்ச்சி திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். இவர் மதிமுகவின் பொருளாளராக பதவி வகிக்கிறார்.
கடந்த 1978-இல் திமுக மாணவரணி பொறுப்பில் இருந்த இவர் பின்னர் ஒருங்கிணைந்த பெரியார் (ஈரோடு) மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பு வகித்தார். 1993-இல் திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது அவருக்கு ஆதரவு தெரிவித்து வெளியேறிய ஒன்பது மாவட்ட செயலாளர்களில் கணேசமூர்த்தியும் ஒருவர். வைகோவுடன் திமுகவில் இருந்து வெளியேறியவர்கள் பின்நாட்களில் மதிமுகவில் இருந்து வெளியேறிய போதும் இறுதிவை மதிமுகவிலேயே வைக்கோவுடன் துணை நின்றவர்.
மறுமலர்ச்சி திமுக தொடங்கியதிலிருந்து ஈரோடு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்தார். இந்நிலையில் கணேச மூர்த்தி கடந்த 2016 முதல் மறுமலர்ச்சி திமுக பொருளாளராக உள்ளார். இவர் 1998 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பழநி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர் 2009, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ஈரோடு தொகுதியிலிருந்து ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் கணேச மூர்த்தி கடந்த 2009 பொதுத் தேர்தலில் மதிமுக சார்பாக வென்ற ஒரே வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
கணேச மூர்த்தியில் தேர்தல் போட்டி விபரங்கள்
1989 மொடக்குறிச்சி சட்டமன்றத்தில் போட்டியிட்டு வெற்றி வெற்றார்.
1998 பழனி மக்களவைத் தொகுதி மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2006 வெள்ளக்கோயில் (சட்டமன்றத் தொகுதி) சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தார்.
2009 ஈரோடு மக்களவைத் தொகுதி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2014 ஈரோடு மக்களவைத் தொகுதி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி பெற்றார்.
2019 ஈரோடு மக்களவைத் தொகுதி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இந்த முறை மதிமுகவுக்கு திமுக கூட்டணியில் ஒரே ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் துரை வைகோ மதிமுக சார்பில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கணேச மூர்த்திக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த கணேச மூர்த்தி கடந்த ஞாயிறன்று (மார்ச் 24) தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியானது.
உடனடியாக ஈரோடு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அழைத்து வரப்பட்ட அவர் கேஎம்சிஎச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து கடந்த 72 மணி நேரமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது உடல் பெருந்துறை எடுத்து செல்லப்படுகிறது. பின்னர் அங்கு பிரேத பரிசோதனைக்கு செய்யப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதையடுத்து உடல் ஈரோட்டிற்கு எடுத்துச்செல்லப்பட உள்ளது. ஈரோட்டில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொதுவாக தேர்தல் என்று வந்து விட்டால் பரபரப்பாக பணியில் ஈடுபடும் கணேச மூர்த்தி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வரும் நிலையில் மரணமடைந்து இருப்பது அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வைக்கோ வருத்தம்
முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணேச மூர்த்தியை பார்த்து திரும்பிய வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், "கணேசமூர்த்தி அறிஞர் அண்ணாவை நேரில் பலமுறை சந்தித்தவர். சட்டமன்ற உறுப்பினர் ஆகி மக்களின் அன்பையும் பெற்றார். நாடாளுமன்றத்தில் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இம்முறை கட்சியில் அனைவரும் சேர்ந்து துரை வைகோவை அனுப்ப வேண்டும் கணேசமூர்த்திக்கு அடுத்த வாய்ப்பு பார்ப்போம் என்று கூறினார்கள்.
அதற்கு நான் ஏற்றுக் கொள்ளவில்லை பிறகு ஓட்டெடுப்பு எல்லாம் நடத்தப்பட்டது 99 சதவிகிதம் அவரை நிறுத்த வேண்டும் என்றார்கள். இரண்டு சீட்டுகள் வாங்குங்கள் ஒன்றை கணேசமூர்த்திக்கும் ஒன்றை துரை வைகோவுக்கு கொடுப்போம் என்று கூறினார்கள். அது போன்று செய்யலாம் என்று கூறினேன் அதன் பிறகும் வாய்ப்பில்லாமல் போனால் ஒரு வருடத்தில் சட்டசபை தேர்தல் வருவதால் அவரை எம்எல்ஏ வாக நிற்க வைக்கலாம் என்று எண்ணினேன்.
இல்லையெனில் அதை விட பெரிய பதவியை ஸ்டாலினிடம் கேட்டு அவருக்கு வாங்கி தரலாம் என்று பார்ப்போம் என்று நினைத்தேன். சட்டமன்ற தேர்தல் வரும்பொழுது அவருக்கு உண்டான காயம் ஆறிவிடும்." என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை தீர்வல்ல:
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9