PTR: துறையில் தோற்றாரா? பழியை ஏற்றாரா? பிடிஆர் மாற்றத்திற்கு பதில் என்ன?
May 11, 2023, 01:05 PM IST
TN FM Minister: எது எப்படியோ பிடிஆர்.,யின் பதவி பறிப்பு, இரண்டு ஆண்டுகளாக அவர் கட்டிக்காத்து வந்த பிம்பத்தை உடைத்து நொறுக்கியிருக்கிறது என்பது மட்டும் உண்மை!
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்றப்படுகிறார் என்கிற பேச்சு கடந்த சில நாட்களாகவே உலா வந்தது. அது இன்று நடந்தும் விட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த அவரது மகன் அமைச்சர் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் பற்றி பிடிஆர் பேசியதாக கூறப்பட்ட ஆடியோவின் வெளிப்பாடே என்று ஒரு தரப்பினர் யூகிக்கின்றனர்.
அது ஒருபுறமிருக்க, நிதித்துறை சார்ந்த நிறைய கோப்புகளை பிடிஆர் தேக்க நிலையில் வைத்துள்ளார். இதனால் நிறைய பணிகளுக்கான, திட்டங்களுக்கான ஒப்புதல் தாமதமாகிறது என்கிற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தது.
மேலே சொன்ன இரு குற்றச்சாட்டுகளை தான், பெரும்பாலும் பிடிஆர் நீக்கத்திற்கு காரணமா அங்கும் இங்குமாக பேசிக்கொண்டிருந்தனர். அப்படியே வைத்துக் கொண்டால் கூட, முதல் விவகாரமான ஆடியோ விவகாரத்திற்குள் வந்தால், பிடிஆர் பேசியதற்கு தண்டனை தான் இந்த துறை மாற்றமா? என்கிற கேள்வி எழாமல் இல்லை.
சரி, அந்த காரணம் இல்லை, இரண்டாவது காரணமான, கோப்புகள் தேங்குவது தான் காரணம் என்று வைத்துக் கொண்டால், நியாயமான முறையில் கோப்புகளை பரிசீலித்தது பிடிஆர்.,யின் குத்தமா? என்கிற கேள்வி வரும். துறை ரீதியான செயல்பாடு என்று பார்க்கும் போது, தமிழக அமைச்சரவையில் பிடிஆர்.,யின் செயல்பாடு பாராட்டப்பட்டது. அப்படியிருக்க, கோப்புகள் தேங்கியிருந்தால் அவரது செயல்பாடு எப்படி பாராட்டும் படியாக இருக்கும்?
அமைச்சரவை மாற்றப்படுவது ஒன்றும் பெரிய விசயமில்லை. ஆனால் அதற்கு இரு காரணங்கள் மட்டுமே இருக்கும். ஒன்று, புதிதாக ஒருவர் இடம் பெறுவது. மற்றொன்று, ஏற்கனவே இருக்கும் துறையில் சரிவர செயல்படாமல் மாற்றப்படுவது. பிடிஆர்.,யிடம் இருந்து நிதித்துறையை பறித்து, தகவல் தொழில்நுட்பத்துறையை வழங்கியிருப்பதன் மூலம், பிடிஆர்.,யின் செயல்பாட்டை முதல்வர் ஸ்டாலின் அங்கீகரிக்கவில்லை என்று தான் எடுத்துக்கொள்ள முடிகிறது.
‘ஜிஎஸ்டி கவுன்சில் சண்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அறிவுரை, பத்திரிக்கையாளர்களுக்கு பொருளாதார பாடம்’ என, தன்னை சிறந்த பொருளாதார நிபுணராக காட்டிக் கொண்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை, அந்த துறையில் இருந்து மாற்றியதன் மூலம், அவரின் திறமையை கேள்விக்குறியாக்கியிருக்கிறது திமுக தலைமை. இது கேட்க கசப்பாக இருந்தாலும் அது தான் உண்மை.
‘நம்பர் 1 துறையான தகவல் தொழில்நுட்பத்துறையை தனக்கு வழங்கிய முதல்வருக்கு நன்றி’ என பிடிஆர் ட்விட் செய்துள்ளார். அப்படியானால் இதற்கு முன் அந்த நம்பர்1 துறையிலிருந்து ஒரு அமைச்சர் விடுவிக்கப்பட்டுள்ளாரே, அவர் அதில் சரியாக செயல்படவில்லை என்று எடுத்துக் கொள்வதா? தனக்கு ஒதுக்கப்பட்ட துறையில் தோற்றாரா பிடிஆர்? அல்லது அவர் மீது சுமத்தப்பட்ட பழியை ஏற்றாரா? இப்படி பல கேள்விகளையும், துணை கேள்விகளையும் எழுப்பிக்கொண்டே போகலாம்.
எது எப்படியோ பிடிஆர்.,யின் பதவி பறிப்பு, இரண்டு ஆண்டுகளாக அவர் கட்டிக்காத்து வந்த பிம்பத்தை உடைத்து நொறுக்கியிருக்கிறது என்பது மட்டும் உண்மை. இதில் ஒரு ஆறுதல், ஆவடி நாசர் போல அவர் நீக்கப்படாமல் மாற்றப்பட்டிருப்பது மட்டுமே!