TN Weather Update: தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 3 வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் சொன்ன அப்டேட் இதோ..!
May 29, 2024, 11:25 AM IST
Weather Update: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (மே 29) முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (மே 29) முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் நாளையும் (மே 29, 30) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31.05.2024 மற்றும் 01.06.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
02.06.2024 மற்றும் 03.06.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மே 29 முதல் 30.05.2024 வரை: அடுத்த 3 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
31.05.2024 மற்றும் 01.06.2024: அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சற்று குறைந்து (1-2° செல்சியஸ்) இயல்பை ஒட்டியும், இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.
மே 29 முதல் 31.05.2024 வரை: குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 இடங்களில் வெயில் சதம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 86 முதல் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.
நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் 5 செ.மீ. மழை பதிவானது.
நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி, வெப்பநிலை 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி பதிவானது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 105, திருத்தணி, வேலூரில் 104, மதுரை நகரம், விமான நிலையம், பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, திருப்பத்தூரில் 101, நாகப்பட்டினம், தஞ்சை, திருச்சியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்