Weather Update: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்..இன்றைய வானிலை நிலவரம் இதோ..!
Jul 16, 2024, 08:23 AM IST
Weather Update: தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இவை காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 17 முதல் 21-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை சின்னக்கல்லாரில் 13 செமீ, வால்பாறையில் 9 செமீ, சோலையாரில் 8 செமீ, தேவாலாவில் 7 செமீ, அவலாஞ்சி, விண்ட் வொர்த் எஸ்டேட், பந்தலூர் ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிக்கான வானிலை அறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 18-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அவலாஞ்சி சுற்றுலா மையம் மூடல்
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி சுற்றுலா மையம் இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்