VK Sasikala: நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் இணையும் அதிமுக அணிகள் ! போட்டு உடைத்த சசிகலா!
Dec 24, 2023, 03:33 PM IST
”நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் அனைத்து அணிகளையும் ஒன்றிணைப்பதுதான் எனது முதல்பணி”
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவுநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய வி.கே.சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில இடங்களில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொங்கலுக்காக செய்யப்பட்ட வாழை சாகுபடி முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. அவர்களுக்கு நிவரண உதவிகளை அரசு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
அரசு எதற்கெடுத்தாலும் பணம் இல்லை என சொல்கிறார்கள். சென்னையில் கார்பந்தயம் நடப்பதாக இருந்தது. அரசிடம் இருந்து தொகையை ஒதுக்கி 240 கோடி செலவில் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் நடக்கும் நிகழ்ச்சிக்கு துரிதமாக வேலை செய்கிறார்கள். பணம் இல்லை என்று ஒருபக்கம் சொல்லிவிட்டு 240 கோடி ரூபாய் செலவு செய்ய பணம் எங்கிருந்து வருகிறது. இதனால் மக்களுக்கு என்ன பயன் என்பதை பார்க்க வேண்டும்.
கார் ரேஸுக்காக போர்க்கால அடிப்படையில் பணிகளை செய்யும் அரசு வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் மெத்தனம் காட்டுகிறது. எண்ணூரில் எண்ணெய் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்குள்ள மக்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் எப்படி போதுமானதாக இருக்கும். விளம்பரம் கொடுத்துவிட்டு நான் அதை செய்துவிட்டேன். இதை செய்துவிட்டேன் என்று சொல்கிறார்கள்.
படிப்புக்காக கடன் வாங்கியவர்களுக்கு முழு கடனை தள்ளுபடி செய்வோம் என்று சொன்னார்கள். ஆனால் அதனை அரசு செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் சகஜமாக ஆவின்பால் கிடைத்தது. ஜெயலலிதா அவர்கள் கோட்டைக்கு சென்று வந்த பிறகு இந்த பிரச்னைகளை எல்லாம் உட்கார்ந்து பேசி உள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் அனைத்து அணிகளையும் ஒன்றிணைப்பதுதான் எனது முதல்பணி, அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றும் கடமை எங்களுக்கு உள்ளது. திமுக ஆட்சி தொடர்ந்து இருந்தால், இலங்கையின் நிலைதான் தமிழ்நாட்டுக்கும் வரும். அவர்கள் சொன்ன வாக்குறுதிகள் எதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை என சசிகலா கூறினார்.
டாபிக்ஸ்