ஷாக் வீடியோ! சரமாரியாக அடித்துக்கொண்ட தனியார் பேருந்து கண்டக்டர்கள்
Dec 07, 2022, 06:10 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இரு தனியார் பேருந்து நடத்துனர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சின்னாளப்பட்டி, கொடைரோடு, வாடிப்பட்டி வழியாக மதுரைக்கு பயணிகளை ஏற்றி செல்கின்றன. சுமார் 5 நிமிடத்தில் இருந்து 15 நிமிடத்திற்கு ஒரு முறை என திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனிடையே தனியார் பேருந்து நடத்துனர்களுக்கு இடையே நேரம் இடைவெளி குறித்து அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவது வழக்கமாக நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லக்கூடிய இரண்டு தனியார் பேருந்து நடத்துனர்களுக்கு இடையே வாகனத்தை இயக்குவதற்கான நேரம் இடைவெளி தொடர்பாக நீண்ட நேரமாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகளப்பாக மாறியது. இதையடுத்து இரு நடத்துனர்களும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து நிலையத்தில் வைத்தே இரண்டு நடத்துனர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.