Vikravandi by-elections Results: ’பணம் தந்து ஜெயிச்சோமா!’ ராமதாஸை கலாய்த்த பொன்முடி!
Jul 13, 2024, 09:54 PM IST
Vikravandi by-elections results: டாக்டர் ஐயா மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. விழுப்புரத்தில் எனது தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கலைஞர்தான் அடுத்த முதலமைச்சர் என்று சொன்னார். ஆனால் அவர் அடிக்கடி மாற்றிக் கொள்வார், அவருக்கு கொள்கை கிடையாது.
விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள் குறித்த மருத்துவர் ராமதாஸின் பேச்சு சகஜமான விஷயம், அதை பெரியதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்கள் டெபாசிட் வாங்கியதே பெரிய விஷயம் என அமைச்சர் பொன்முடி கூறி உள்ளார் .
விக்கிரவாண்டியில் வெற்றியை குவித்த திமுக
தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரை திமுக வேட்பாளராக களம் இறங்கிய அன்னியூர் சிவா, ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகளை பெற்று வெற்றி பெற்று உள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட சி.அன்புமணி 56 ஆயிரத்து 296 வாக்குகளை பெற்று 68 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட அபிநயா 10 ஆயிரத்து 602 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார். இவருக்கும் திமுக வேட்பாளருக்கும் இடையேயான வாக்குகள் வித்தியாசம் மட்டும் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 451 வாக்குகள் ஆகும்.
திமுகவின் வெற்றியை விமர்சித்த ராமதாஸ்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ஆளுங்கட்சி அதன் அத்துமீறலை தொடங்கி விட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவிர மீதமுள்ள 33 அமைச்சர்களும், 125&க்கும் கூடுதலான சட்டப்பேரவை உறுப்பினர்களும் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு பணத்தையும், பரிசுப் பொருட்களையும் வெள்ளமாக பாயவிட்டனர். ஒவ்வொரு நாளும் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து அரிசி மூட்டை, மளிகை சாமான், வேட்டி & சேலை, தங்க மூக்குத்தி, தினமும் ரூ.300 முதல் ரூ.500 வரை பணம் என வாரி இறைக்கப்பட்டது. மது ஆறாக பாய்ந்தது. ஊருக்கு ஊர் பிரியாணி சமைத்து வாக்காளர்களுக்கு விருந்து வைத்தனர். நிறைவாக ஒவ்வொரு வாக்குக்கும் ரூ.3000 வரை பணம் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.10,000 வரை திமுக வழங்கியது.” என கூறி இருந்தார்.
பொன்முடி பேட்டி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா வெற்றி சான்றிதழை பெற்ற நிலையில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் முதலமைச்சர் தளபதி அவர்கள்தான், மகளிர் உரிமை தொகை, இலவச பேருந்து திட்டம், நான் முதல்வன், புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்று உள்ளது.
இந்த தேர்தல் பொறுப்பாளர்களாக என்னையும், ஜெகத்ரட்சகன் அவர்களையும் அறிவித்து உள்ளனர். மூன்றாண்டு கால திமுக அரசின் சாதனைகளை சொல்லி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு கேட்க சொன்னார்.
பணப்பட்டுவாடா செய்து திமுக வெற்றி பெற்று உள்ளதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறி உள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அவரால் வேறு என்ன சொல்ல முடியும். அவர் எப்போதும் நேரத்திற்கு தகுந்தர் போல் பேசக்கூடியவர். மந்திரி பதவி கிடைக்கும் என்று திமுக உடன் வந்தார். இப்போது மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக பாஜக கூட்டணியில் உள்ளார். அவரோ , அன்புமணியோ கொள்கையை ஒழுங்காக பேசி உள்ளார்களா?
நீட் தேர்வை ஒழிப்போம் என்று ராமதாஸ் கூறுகிறார். அதை அண்ணாமலையிடம் சொல்ல தராயாக உள்ளாரா.
டாக்டர் ஐயா மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. விழுப்புரத்தில் எனது தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கலைஞர்தான் அடுத்த முதலமைச்சர் என்று சொன்னார். ஆனால் அவர் அடிக்கடி மாற்றிக் கொள்வார், அவருக்கு கொள்கை கிடையாது.
அவரது பேச்சு மிக சகஜமான விஷயம், அதை பெரியதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்கள் டெபாசிட் வாங்கியதே பெரிய விஷயம்.