HT Special: ராஜபாளையம் நாய்களின் தனித்துவம் இதுதான்!
Apr 28, 2023, 06:15 AM IST
Rajapalayam Dog: டாபர்மேன், லேபராடர், ஜெர்மன் ஷெப்பெர்ட் போன்ற அயல் நாட்டு நாய்களிடம் காணும் திறமைகளும், தகுதிகளும் இராஜபாளையம் நாய்களிடம் காணலாம்.
உலகில் 1000-க்கும் மேற்பட்ட நாய் இனங்கள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றுள் 350 வகை நாய் இனங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டவை. அதில் 7 இனங்கள் இந்தியாவை சேர்ந்தவை. அதிலும் கன்னி, சிப்பிபாறை, கோம்பை, ராஜபாளையம் இந்த நான்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவை. இதில் ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை நாய்கள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில் பெருமளவில் காணப்படுகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த நாட்டு இனமான இது இயல்பிலேயே சிறந்த வீரமும், விசுவாசமும் அதிகம் கொண்டவை என்று சொல்லப்படுகிறது.
கன்னி - கறுப்பு, சிப்பிப்பாறை - பழுப்பு, கோம்பை - இளம் பழுப்பு, இராஜபாளையம் - இளம் வெளுப்பு. இராஜபாளையம் நாய்கள் நல்ல உடலமைப்பு உடையவை. 55 பவுண்ட் எடை, 26 அங்குலம் உயரம், அவை மிக வேகமாக ஓடும் திறன் கொண்டவை. இந்த ராஜபாளையம் நாயின் காதுமடல்கள் மடங்கியும், உறுதியாகவும் கால்கள் நேராகவும் இருக்கும். வால் பகுதியை தடவிப் பார்த்தால் ஆங்காங்கே கணுக்கள் போன்றும், பார்ப்பதற்கு அரிவாள் போன்றும் தோற்றமளிக்கும். இந்த வால் தூக்கி நிற்கும். தலை சிறியதாகவும் முகம் கூறான அமைப்பிலும் இருக்கும். நெஞ்சுப்பகுதி சற்று இறங்கியும், வயிற்றுப்பகுதி கொஞ்சம் ஏறியும் வாலின் அடிப்பகுதி தடித்தும், நுனிப்பகுதி மெல்லியதாகவும் இருக்கும்.
வளர்ப்பு நாய் வகைகளில் மிகவும் அறியப்படும் நாய் இதுவாகும். நாட்டு நாய்களில் தோற்றத்திலும், குணாதிசயத்திலும் ராஜபாளையம் நாய்கள் தனித்துவம் பெற்றவை. ராஜபாளையம் நாய்களின் பூர்வீகம் ஆந்திரா என்றும் சொல்லப்படுகிறது. விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைந்தவுடன் அவரது படைவீரர்கள் தமது நாய்களுடனும், எடுத்து வந்த உடைமைகளுடனும் தங்கிய இடமே இராஜபாளையம் ஆனது. ராஜபாளையம் பகுதியில் மட்டுமே இவ்வகை நாய்கள் கிடைக்கப்பெறுவதால் இப்பெயர் பெற்றது.
ராஜபாளையம் ஊரில் நுழைந்தவுடன் இரு புறமும் 'நாய்கள் வாங்க அணுகவும்' என்னும் விளம்பர பலகைகள் கண்ணில்படும். ஊருக்கு வெளியேதான் வியாபாரப் பண்ணைகள். கிட்டத்தட்ட 200 குடும்பங்கள், ராஜபாளையம் நாய் வணிகத்தை மட்டுமே தங்களுடைய வாழ்வாதாரமாகக் கொண்டு, அந்த ஊரைச் சுற்றி இயங்கி வருகிறார்கள். குட்டிகள் அவற்றின் தரத்தின் அடிப்படையில், ரூபாய் எட்டாயிரத்தில் இருந்து பதினைந்தாயிரம் வரை விலைபோகின்றன. அதே சமயம், இங்கே களப்பின நாய்களும் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, ராஜபாளையம் நாய் வாங்க விரும்புகிறவர்கள் நாயின் தரத்தை உறுதி செய்த பின்பு வாங்கவும்.
2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் நாள் பிரதமர் நரேந்திர மோடி, ‘மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய போது, இந்தியாவின் நாட்டு வகை இனங்களான தமிழ்நாடு மாநிலம், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சிப்பிப்பாறை வகை நாய்களை வீடுகள் தோறும் வளர்க்க வேண்டும். வீட்டுக்கு காவல்புரிந்து சிறந்த பாதுகாப்பு அளிப்பவை என புகழ்ந்து கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.