Krishnagiri Murder: கிருஷ்ணகிரி ஆணவ கொலையில் மேலும் இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்!
Mar 23, 2023, 01:47 PM IST
முரளி நாகராஜ் ஆகிய இருவர் சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.
கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த இளைஞரை ஆணவ கொலை செய்த மாமனார் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்த நிலையில் இன்று மேலும் 2 பேர் சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.
கிருஷ்ணகிரி ஆணவ கொலை குறித்து இன்று சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, "கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரி பட்டினம் காவல் நிலைய சரகம், கிட்டம்பட்டியை சேர்ந்த ஜெகன் (28) என்பவர் மார்ச் 21 அன்று சுமார் 1.30 மணியளவில் கே.ஆர்.பி.அணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முழுக்கான்கோட்டை கிராமத்தை சேர்ந்த சங்கர், அஇஅதிமுக கிளை செயலாளர் உள்ளிட்ட மூவர் ஜெகனை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக காவேரி பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்த விசாரணையில் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியான சங்கரின் மகள் சரண்யாவை டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான ஜெகன் காதலித்து பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு அழைத்து சென்று 26-01-2023 அன்று கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமுற்ற சங்கர் உள்ளிட்டோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள். சங்கர் காவல் துறையால் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலையில் சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவதானப்பட்டி அதிமுக கிளை செயலாளர் என்பது காவல் துறையினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகளும் விழிப்புணர்வு பணிகளும் காவல்துறை, மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமூகநீதிகாக்கும் தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமூகநல்லிணக்கத்தை பேணிக்காத்திட்ட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஏற்கனவே இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணின் சந்தை சரணடைந்திருந்தார். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய முரளி நாகராஜ் ஆகிய இருவர் சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்