TTV Dhinakaran : பேருந்து சேவை குறைக்கப்பட்டிருப்பது தனியாருக்கு தாரைவார்க்கும் முன்னோட்டமோ? - டிடிவி தினகரன்!
May 05, 2023, 07:08 PM IST
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல் பேருந்து சேவை குறைக்கப்பட்டிருப்பது தனியாருக்கு தாரைவார்க்கும் முன்னோட்டமோ? என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து துறையில் முறைகேடுகளைக் களைந்து புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதால், கோடை விடுமுறைக்கு மக்கள் வெளியூர்களுக்கு பயணிக்க முடியாமல் திண்டாடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
பெரும்பாலான ஓட்டுநர்கள் பணிஓய்வு பெற்றதாலும், பேருந்துகளை இயக்குவதற்கு ஓட்டுநர்கள் தயாராக இருந்தாலும் உரிய முறையில் அவர்களுக்கு பணி வாய்ப்புகள் வழங்கப்படாததால் பெரும்பாலான பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தப்பட்டிருப்பதாக தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதேநேரம் போக்குவரத்துறையின் நிர்வாக குளறுபடியால் போக்குவரத்துக்கழகங்கள் நஷ்டமடைந்திருப்பதாகக் கூறி பேருந்து சேவையை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதாக ஆளும் கட்சியின் தொழிற்சங்கமே குற்றஞ்சாட்டி இருப்பதும், தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல் பேருந்து சேவை குறைக்கப்பட்டிருப்பது தனியாருக்கு தாரைவார்க்கும் முன்னோட்டமோ? என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
ஆகவே போக்குவரத்து துறையில் முறைகேடுகளைக் களைந்து புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதுடன், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், பேருந்துகளை இயக்க பாரபட்சமின்றி பணி வாய்ப்புகளை வழங்கி பயணிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
டாபிக்ஸ்