Tomato Price Hike: ’கிலோ 60 ரூபாய்க்கு நியாய விலைக் கடைகளில் தக்காளி!’ அமைச்சர் பெரியக்கருப்பன் அறிவிப்பு!
Jul 03, 2023, 02:26 PM IST
”விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை தொடர்ந்து வாங்கும் அளவுக்கு தக்காளி உள்ளிட்ட தோட்டப்பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு வழங்க வேண்டும்”
நாடு முழுவதும் தக்காளி விலை கடும் உயர்வை சந்தித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியக்கருப்பன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வடசென்னையில் 32 கடைகளிலும், மத்திய சென்னை மற்றும் தென் சென்னையில் 25 கடைகள் என 82 நியாயவிலை கடைகள் மூலம் இந்த விற்பனையை தொடங்க உள்ளோம். அது மட்டுமின்றி ஏற்கெனவே 27 பண்ணை பசுமை கடைகளிலும் நகரும் பசுமை பண்ணை காய்கறி வாகனங்களிலும் இந்த விற்பனை தொடரும்.
நியாயவிலைக்கடைகளில் கிலோ 60 ரூபாய் விலைக்கு இந்த தக்காளி விற்பனை செய்யப்படும். இப்போது தலைநகரங்களிலும் பின்னர் படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் குறிப்பிட்ட கடைகளில் விரிவுப்படுத்தப்படும்.
இதில் யாரையும் குறை சொல்வதற்கு இல்லை. நம்முடைய தக்காளி தேவையை நம்முடைய மாநிலம் மட்டும் பூர்த்தி செய்தது இல்லை, அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திராவில் இருந்து நமக்கு தக்காளி வந்தது. எல்லா மாநிலங்களிலும் வரத்து குறைந்ததால் தற்போது நமது மாநிலத்திலும் வரத்து குறைந்துள்ளது.
இந்தியா முழுவதும் இந்த தக்காளி விலையேற்றம் உள்ளது. பருவகாலத்தில் இந்த தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம்தான். எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பண்ணை பசுமை கடைகளில் வழக்கத்தை விட 4 மடங்கு விற்பனை கூடி உள்ளது. குறைந்தபட்சம் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கிலோ வரை விற்பனை ஆகி கொண்டுள்ளது.
நுகர்வோர்களையும் விவசாயிகளையும் பாதிக்காமல் இந்த விற்பனையை செய்ய வேண்டும் என முதலமைச்சர் அறிவுத்தி உள்ளார்கள். அந்த அறிவுத்தலின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இதன் விளைவு ஓரிரு நாட்களில் உங்களுக்கு தெரியும்.
பிறமாநிலங்களில் இருந்து தக்காளி வந்தது, நம்முடைய மாநிலத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் இருந்துதான் 75% உற்பத்தி நடைபெற்றது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தக்காளி விலை உயர்வு என்பது தொடர்ந்து நடந்து கொண்டு உள்ளது. எதிர்காலத்தில் இது போன்று நெருக்கடிகள் வராத அளவுக்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை தொடர்ந்து வாங்கும் அளவுக்கு தக்காளி உள்ளிட்ட தோட்டப்பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு வழங்க வேண்டும்.
தக்காளி பதுக்கல் என்பது எதுவும் இல்லை, வியாபாரிகளும் நமக்கு ஒத்துழைப்பு தருகிறார்கள் என அமைச்சர் பெரியக்கருப்பன் தெரிவித்தார்.
டாபிக்ஸ்